2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

'ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்': ராமதாஸ்

George   / 2016 ஜூன் 13 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈழத்தமிழர்களை  தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக வைத்திருக்கவே இலங்கை அரசு விரும்புகிறது, தமிழர்களுக்கு எந்தவித உரிமையையும் வழங்க இலங்கை அரசாங்கம்  அரசு தயாராக இல்லை' என பா.ம.க. கட்சி நிறுவனர் டொக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கட்கிழமை  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

'தமிழர்கள் நிம்மதியாக வாழும் வகையில்  வட மாநிலத்திலிருந்து இலங்கை இராணுவம் திரும்பப்பெறப்பட வேண்டும் என கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கை வடக்கு மாகாண அரசின் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள இலங்கை இராணுவத்தின் வட பிராந்தியத் தளபதி மகேஷ் சேனநாயக, 'வடக்கு மாகாணத்தில் தனிநாடு கோரிக்கை எழாமல் தடுப்பது தான் இராணுவத்தின் நோக்கம். வட மாநிலத்திலிருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டால், தமிழர்கள் தனி ஈழ கோரிக்கையை கையில் எடுத்து விடுவார்கள். எனவே, வர மாநிலத்திலிருந்து  படைகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை' என்று கூறியிருக்கிறார். 

ஈழத்தமிழர்களை  தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக வைத்திருக்கவே இலங்கை அரசு விரும்புகிறது, தமிழர்களுக்கு எந்தவித உரிமையையும் வழங்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதையே  இது வெளிப்படுத்துகிறது.

இந்தியாவை ஆளும் அரசுகள், தமிழர்களின் உணர்வுகளை புறக்கணித்து விட்டு, இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதால் தான் ஈழத்தமிழர்களை அடக்கி, ஒடுக்கும் பணிகளில் இலங்கை அரசாங்கம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; வட மாநிலத்திலிருந்து படைகளை திரும்ப பெற வேண்டும் என்பது தான் மனித உரிமை ஆணையம் இலங்கைக்கு பிறப்பித்த ஆணையாகும். இதை  இந்தியாவும் ஆதரித்தது

ஆனால், மனித உரிமை ஆணையத்தின் இந்த இரு உத்தரவுகளையுமே இலங்கை பின்பற்றவில்லை. இதன்மூலம் இந்தியாவையும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தையும் இலங்கை அவமதித்துவிட்டது. இந்த நிலையில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது தான் உலகத் தமிழர்களின் வினாவாகும்.

வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம்  தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின்  கூட்டத்தில், இலங்கையின் செயல்பாடு குறித்து புகார் செய்வதுடன், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப்  பேரவையின் கூட்டத்தில் இலங்கை மீது கடுமையான  நடவடிக்கை  எடுப்பதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வரவேண்டும். 

அதுமட்டுமின்றி,   தனித் தமிழீழம் அமைப்பது குறித்து ஐ.நா. மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு  நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்து கிறேன்' என தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .