2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'உலகத் தலைவர்களின் இலங்கை பற்றிய சாதகமான நிலைப்பாட்டில் மகிழ்ச்சி'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்காக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இன்று புதன்கிழமை (21) உரையாற்றும்போது உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைக்க இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

நியூயோர்க் Loews Regency ஹோட்டலில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (20) மாலை, இலங்கை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டவிரோதமான போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பில் கூடிய அவதானத்தை செலுத்தவுள்ளதுடன், தான் முன்னெடுத்துவரும் போதைப்பொருளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் பொதுச்சபையில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன நிகழ்விலும் கலந்துகொண்ட ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்களுடன கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இலங்கையில் தெளிவான மாற்றம் ஒன்று தென்படுகின்றது என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இதன்போது தெரிவித்தார். அதேவேளை, பான் கீ மூன், இலங்கையின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் தன்னிடம் வாழ்த்துத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை தொடர்பில் எல்லோருமே பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, அவர்களுடைய இந்தச் சாதகமான பிரதிபலிப்புக்கள் தொடர்பில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

தற்போது எந்தவொரு நாடும் இலங்கையுடன் வெறுப்புடனோ அல்லது பகைமையுணர்வுடனோ இல்லையெனவும் அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கூடிய சாதகமான நிலைப்பாட்டுடனேயே உள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, உலகத்தலைவர்களுடைய இந்த சாதகமான நிலைப்பாட்டை இலங்கைக்கு திரும்பிச் செல்லும்போது தான் எடுத்துச் செல்வேன் எனவும் மேலும் தெரிவித்தார்.

உலக வெப்பமயமாதல் தொடர்பான பாரிஸ் பிரகடனத்துக்குப் பல நாடுகள் ஒப்புதல் அளித்தமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைந்திருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும், பொருளாதார ரீதியில் பலம்மிக்க தேசமாக இலங்கையை மாற்றுவதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .