2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'எந்த மாற்றமும் இல்லை'

George   / 2016 ஒக்டோபர் 30 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“வடக்கில் இராணுவத்தினருக்கு பதிலாக பொலிஸாரை நிலை நிறுத்துவதாக இருந்தால், தமிழ் மொழியையும் கலாசாரத்தை அறிந்த தமிழர்கள் அதிகளவில் பொலிஸாராக நியமிக்கப்பட வேண்டும்” என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 “நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய சுயாட்சியையும், ஜனநாயகத்தையும், நியாயத்தையும் வழங்கவில்லை என்றால், அரசாங்கத்துக்குக் எதிராக, வடக்கில் நடைபெறும் எழுச்சியை நிறுத்த முடியாது” என்றும் விக்ரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், நேற்று இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில், தமிழ் மக்கள், கொலை செய்துகொண்டு தாமும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் செல்வதை தடுத்து நிறுத்த முடியாது.

வடக்கில், மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புகளையும் நடத்தி வருகின்றனர். அத்துடன், அங்கு போராட்ட குழுக்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், பல்வேறு அரசியல் நோக்கங்கள் வெளியில் வருகின்றன என அரசாங்கத்தின் தலைவர்கள் கோஷமிட ஆரம்பித்துள்ளனர். ஏன் அப்படி நடக்கின்றது என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. நீங்கள் வாக்குறுதி வழங்கியது போல் அரசியல் தீர்வை வழங்குவதில்லை” என்றார்.

“மேலும், வடக்கில் இராணுவத்தை திரும்பப்பெற்று சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்தது. இராணுவத்தை சிறிது சிறிதாக அகற்றி விட்டு, அதற்கு பதிலாக ஆயுதங்களை தாங்கிய பொலிஸாரை அங்கு நிலை நிறுத்தியுள்ளனர். பொலிஸார் ஏ.கே 47 துப்பாக்கியுடன் செல்கின்றனர். எந்த மாற்றமும் இல்லை. இராணுவத்தினருக்கு பதிலாக, பொலிஸ் அதிரடிப்படையினரை நிலை நிறுத்துகின்றனர்”  என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .