2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘கறுப்பு வானிலேயே என்னைக் கடத்தினர்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 27ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாகக் கூறப்படும், டெலிகொம் மனிதவலு சங்கத்தின் உபதலைவரான எம்.எஸ்.மங்கள, கறுப்புத் துணியினால் கண்கள் கட்டப்பட்ட நிலையில், நேற்று (01) அதிகாலை மீட்கப்பட்டதாக, பிலியந்தலைப் பொலிஸார் தெரிவித்தனர்.  

இங்கிரிய நம்பபான பாலத்துக்கு அருகிலிருந்தே நேற்று அதிகாலை 2:30க்கு அவரை மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.   

தன்னுடைய கணவரான எம்.எஸ்.மங்கள தொடர்பில், எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லையென அவருடைய மனைவி, பிலியந்தலை பொலிஸில், கடந்த சனிக்கிழமை, முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையிலேயே ஆறு நாட்கள் கடந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.   

கொழும்பு, கோட்டை டெலிக்கொம் நிறுவனத்துக்கு அருகாமையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தனது கணவன், வெள்ளிக்கிழமை நள்ளிரவு, வீட்டுக்கு வருவதாகக் கூறிவிட்டு, உண்ணாவிரதமிருந்த இடத்திலிருந்து கிளம்பியதாகவும், அந்த நேரத்திலிருந்து அவர் தொடர்பில் எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை என, அவருடைய மனைவி, பொலிஸில் செய்திருந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.   

இதேவேளை, மீட்கப்பட்ட எம்.எஸ்.மங்கள, பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், “மோட்டார் சைக்கிளில் கடந்த வெள்ளிக்கிழமை, வீட்டை நோக்கி பயணித்துகொண்டிருந்தபோது, கறுப்பு நிற வானொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள், மஹரகமப் பகுதியில் வைத்து என்னை பலவந்தமாக, வானுக்குள் ஏற்றி, சுமார் மூன்று மணிநேரத்துக்குப் பின்னர் ஓரிடத்தில் அடத்துவைத்தனர்.  

டெலிகொம் மனிதவலு சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தவேண்டுமென அங்குவைத்து, என்னை, அச்சுறுத்தினர்” என தெரிவித்துள்ளார்.

“அதன்பின்னர், இன்று (நேற்று) அதிகாலை வேளையில், என்னுடைய கண்களை கறுப்புநிற துணியினால் கட்டி, வாகனமொன்றில் ஏற்றிய அவர்கள், சுமார் மூன்று மணிநேர பயணத்துக்குப் பின்னர், அந்த வாகனத்திலிருந்து என்னை

தள்ளிவிட்டதுடன், தலைகவசம் மற்றும் சேர்ட்டை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்” என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, டெலிகொம் மனிதவலு சங்கத்தின் உப-தலைவரான எம்.எஸ்.மங்களவின் மோட்டார் சைக்கிள், பிலியந்தலை கலாசார மத்திய நிலையத்துக்கு அண்மையில், அநாதரவாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், பிலியந்தலை பொலிஸாரினால் மீட்கப்பட்டது.  

அவருடைய மனைவி செய்திருந்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்டிருந்த போதே, மோட்டார் சைக்கிளை கடந்த 29ஆம் திகதியன்று மீட்டதாகத் தெரிவித்த பொலிஸார், அந்த சைக்கிள், தன்னுடைய தந்தையுடையது என அவருடைய மகன், 31ஆம் திகதியன்று அடையாளம் காட்டினார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.   
மங்களவின் மோட்டார் சைக்கிள், பிலியந்தலை-இதிஹாஹேன வீதிக்கு திரும்பும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, அதனை மீட்டெடுத்து, அதன் உரிமையாளரை உறுதிப்படுத்தி கொண்டதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X