2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘சிறுபான்மையினரின் பிரச்சினைகளே அனைத்துக்கும் அடிகோலி’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

“இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களுக்கு, தேசிய ரீதியில் சரியான இடம் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக, சிறுபான்மையின விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இஸாக் நாடியா கூறினார்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், நேற்றுப் புதன்கிழமை (19) தெரிவித்தார். 

அத்துடன், சிறுபான்மையினரின் பிரச்சினையே, இந்நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிகோலியாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்ததாக, சுமந்திரன் கூறினார்.  

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் சிறுபான்மையின விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இஸாக் நாடியாவுக்கும் இடையிலான சந்திப்பு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், ​நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டார். 

அச்சந்திப்புத் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“இந்த நாட்டு இராணுவத்தில் 99 சதவீதமானோர், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறிருந்தால், இந்தநாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சமவுரிமை இருக்கும் எனக் கூறமுடியாது. ஆகவே, அந்த நிலைமை மாறி, குறைந்தது ஒவ்வோர் இனத்தைச் சேர்ந்த மக்களும் விகிதாசார அடிப்படையில், நாட்டின் படைத்தரப்பில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என அறிக்கையாளர் கூறினார். 

கடந்த 10 நாட்களாக பல்வேறு இடங்களுக்குச் சென்று தயாரித்த தன்னுடைய அறிக்கையில், சிறுபான்மைப் பிரச்சினையே முக்கியமான பிரச்சினையாக காணப்படுவதாகவும் அடுத்தவருடம் பெப்ரவரி மாதத்தில், இந்த அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.  புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதை ஐ.நா அறிக்கையாளருக்குச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், பேரினவாத ஆட்சிமுறையாக இல்லாமல், அனைத்து மக்களும் தங்களுடைய இறைமையை உபயோகிக்கத்தக்கதான ஆட்சிமுறையாக புதிய அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படுவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளவேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .