2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் விசாரணை வேண்டும்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நில்வளா கங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக, கடந்த அரசாங்கத்திடமிருந்து 4,012 மில்லியன் ரூபாய் பெறப்பட்ட போதிலும், எந்தவொரு அபிவிருத்திப் பணியும் முன்னெடுக்கப்படவில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது அந்த அறிவிப்பு தொடர்பில், விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று, ஒன்றிணைந்த எதிரணியினர், வலியுறுத்தனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும, மேற்குறித்த விடயம் தொடர்பில், தான் ஜனாதிபதியிடம் விசாரித்ததாகவும் இருப்பினும்,அவர் அந்தக் கருத்தை மறுத்ததாகவும் குறிப்பிட்டார்.  

பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்​கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“நில்வளா கங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடி​ன், இந்த விடயத்தை வைத்துக்கொண்டு, ஜனாதிபதிக்கு சேறு பூச, அனைவரும் முன்வருவர். அதற்கு அவர், இடமளிக்கக் கூடாது.  

ஜனாதிபதியைச் சுற்றியுள்ள சில ஆலோசகர்கள், அவருக்கு பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றனர். ஜனாதிபதி என்பவர், அதிக வேலைப்பளுவுடன் காணக்கூடியவர். அதனால், தனிப்பட்ட ரீதியில், எல்லா விடயங்கள் பற்றியும் ஆராய முடியாது. அதனால், சில விடயங்களைக் கூற முன்னர், அது உண்மையா? பொய்யா? என்பது தொடர்பில், ஜனாதிபதி ஆராய வேண்டும்.  

சிலர் மீது சேறு பூசுவதற்கென்றே, சிலர் அரசியல் செய்து வருகின்றனர். அவர்களின் அந்நடவடிக்கைக்கு உரம் போடும் வகையில், ஜனாதிபதி செயற்படக்கூடாது. அதனால், மேற்கண்ட குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை, விரைவில் வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .