2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டுத்தரவும்'

Princiya Dixci   / 2016 நவம்பர் 07 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அதனை மீட்டுத்தருமாறு, இலங்கைக்கு உத்தியோகபூர்வ குறுகியகால விஜயத்தை மேற்கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தூதுக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

‘30 வருடகாலங்களாக இடம்பெற்ற அழிவுப்போரிலிருந்து படிப்படியாக முன்னேறிவரும் நாட்டை பல்வேறு திட்டங்கள் மூலமாக முன்னேற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகவும் பாராட்டுகிறது.  

‘இந்நாட்டிலுள்ள அனைவரும் ஏதோவொரு வகையில் குடும்பத்தில் அன்புக்குரியவரை இழந்ததிலிருந்து பெறுமதியான வீடுகள் மற்றும் வாகனங்கள் போன்றவை மட்டுமல்ல, குறைந்தபட்சம் மனநிம்மதியையாவது இழந்துள்ளனர் என்பதை வலியுறுத்துகிறேன்.  

ஆனால், இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்டவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஆகும். இவற்றில் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளான பகுதிகள், யுத்தம் நடைபெற்ற மாவட்டங்களாகும்.  

ஏற்பட்ட இழப்புக்களின் பெறுமதியைப் பண ரீதியாக மதிப்பிட முடியாது. வட மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திலேனும் இதுபோன்ற ஒரு திட்டமும் அமுல்படுத்தப்படாமை மனவருத்தத்துக்குரியதாகும்.  

மிக முக்கியமாக நான் கூற விரும்புவது, பொருத்தமானதுமான சிலவிடயங்கள் பற்றி தூதுக்குழுவுக்கு தெளிவுப்படுத்தப்படாமையால், அதனைச் செய்யவேண்டிய கடமை எனக்குண்டு. முதலாவதும் முக்கியமானதுமான ஜனநாயக உரிமைகள் உள்ளடங்கிய மனித உரிமைகள் பற்றியதாகும். 

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலை, அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கும் நீடிக்கும் என்பது தெளிவாகிறது. தமிழ் மக்கள் சார்பிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் இன்னுமொரு தூதுக்குழுவை அனுப்பி பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய கட்சிகளை அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கையை ஒரு வலுவான ஜனநாயக நாடாகத் திகழ உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேசிய நல்லிணக்கம் தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றம், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மீள அமுல்படுத்தல், இலங்கைப் பெண்களை அரசியல், பொருளாதார ரீதியாக மேம்படுத்தல் ஆகியவற்றோடு திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒன்றியத்தின் உதவியுடன் அமுல்படுத்தப்படவிருக்கும் திட்டங்களை மேற்பார்வையிடுவதே இத்தூதுக்குழுவின் நோக்கங்களாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .