2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'புதிய அரசியலமைப்பு நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல'

Niroshini   / 2017 ஜனவரி 01 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு வரைவில் நாட்டுக்குத் தீமையான எந்தவொரு அம்சமும் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது எந்தவகையிலும் நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் முன்னிலையில் உறுதியளித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோதும் அதில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அல்லது புத்த சாசனத்துக்கு பாதிப்பான எந்தவொரு அம்சமும் கிடையாது என்பதுடன், அத்தகையதொரு நடவடிக்கைக்கு தனது பதவிக் காலத்தில் இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று (31) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அஸ்கிரிய மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதமின்றி புதிய அரசியலமைப்பை வரைவதற்குத் தாம் தயாராக இல்லை. புதிய அரசியலமைப்பு ஒருபோதும் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஓர் ஆவணமாகவன்றி மக்கள் பிரதிநிதிகள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைக் கருத்திற் கொண்டே தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும்போது மக்களின் கருத்துக்களை கேட்டறிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் சரியான முறையில் அறிந்திருக்கவில்லை என இதன்போது மகாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மழை வேண்டி நாடளாவிய ரீதியில் பிரித் பாராயணம் செய்வது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதன்மூலம் உரிய காலத்தில் மழை கிடைக்கப்பெற்று வரட்சி நிலை நீங்குவதற்கு வாய்ப்புள்ளது என்றும் மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் மல்வத்தை விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

நாட்டை வறுமையிலிருந்து விடுவித்து அனைத்து மக்களையும் பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்கு 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டம் குறித்து ஜனாதிபதி மல்வத்தை மகாநாயக்க தேரருக்கு விளக்கியதுடன், கடந்த இரண்டு வருட காலமாக தற்போதைய அரசாங்கம் பின்பற்றி வந்த நட்பு ரீதியான வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் பல்வேறு உலக நாடுகளின் உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சக்தி பிரச்சினை தொடர்பாக மகாநாயக்க தேரர் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதன்போது, இதற்கான தீர்வுகளைக் கண்டடைவதற்காக ஏனைய நாடுகளைப் போல இலங்கையும் தயாராகவுள்ளதாகவும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .