2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘பால் மாற்றம் குறித்து முறைப்பாடுகள் இல்லை’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

சில குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆட்கள், குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, பால் மாற்றத்தைச் செய்து கொள்கின்றமை தொடர்பிலான தரவுகளோ அல்லது முறைப்பாடுகளோ கிடைக்கவில்லை என்று, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25), வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஐ.தே.க எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.  

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு, ஆணொருவரைப் பெண்ணாகவும் பெண்ணொருவரை ஆணாகவும் மாற்ற முடியாது என்று, முன்னாள் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்” என்று விளித்துக் கூறிய அமைச்சர் சாகல ரத்நாயக்க, பால் மாற்றம் குறித்து எவ்விதமான தரவுகளோ அல்லது முறைப்பாடுகளோ கிடைக்கவில்லை என்றும் கூறினார்.  

குறுக்குக் கேள்வியை எழுப்பிய புத்திக பத்திரண, சில குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆட்கள், குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, பால் மாற்றத்தை செய்துக்கொள்கின்றார்கள். அவ்வாறானவர்கள் சிலரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார் என்று சுட்டிக்காட்டினார். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர், “பொலிஸ் திணைக்களத்தினால் எனக்கு வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே பதிலளித்தேன் என்பதுடன், மேலதிக விவரங்கள் தேவைப்படின் தேடியறிந்து பதிலளிப்பேன்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .