2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'படைவீரர்களைப் பயன்படுத்தி குழப்ப முயற்சிக்கின்றனர்'

Princiya Dixci   / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பாவிப் படைவீரர்களைப் பயன்படுத்தி நாட்டில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்க சிலர் மேற்கொண்டுவரும் முயற்சிகள் கவலையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
 
நாட்டில் ஒரு பிரச்சினை ஏற்படும்போது அதில் குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் சம்பந்தப்படுவார்களாயின் அப்பிரச்சினையை இலகுவில் தீர்த்துக்கொள்ள முடியும். சம்பந்தமில்லாத தரப்பினர் தலையிடுவதன் காரணமாகப் பல்வேறு குழப்ப நிலைமைகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அண்மையில் இடம்பெற்ற அங்கவீனமுற்ற படைவீரர்கள் தொடர்பான நிகழ்வில் அங்கவீனமுற்ற படைவீரர்கள் அல்லாத, அரசாங்கத்தை அசௌகரியத்துகற்குள்ளாக்கும் நோக்குடன் சில தரப்பினர் தலையிட்டதன் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டதாகக்  குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் நேற்றுப் புதன்கிழமை (09), மத்தியஸ்த சபையின் 25 வருட பூர்த்தி மற்றும் தேசிய சமரசதின விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நீதி அமைச்சும் தேசிய மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவும் இணைந்து இவ் விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

நாட்டுக்காக உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களுக்கு இவ்வாறு நடந்து கொள்ள முடியாது என்று ஜனாதிபதி, படைவீரர்கள் தாய் நாட்டுக்காக மிகவும் அறிவுபூர்வமாகச் செயற்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார்.

சமூகத்தின் ஒழுக்கப் பண்பாடுகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து சமூக நீதிக்காகச் செயற்படும் மத்தியஸ்த சபையின் நடவடிக்கைகளை ஜனாதிபதி பாராட்டினார்.

நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்பை மக்கள் எதிர்பார்க்கும் வகையில் தாமதமின்றி நிறைவேற்றுவதற்காக, நாட்டின் நீதிமன்ற முறைமையிலுள்ள வழக்குகள் தேங்கிநிற்கும் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன், சிறிய பிணக்குகளைத் தீர்த்து, நீதியை நிலைநாட்டுவதற்காக 1988ஆம் ஆண்டின் 72ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 1991ஆம் ஆண்டு மத்தியஸ்த சபை தாபிக்கப்பட்டது.

தற்போது நாட்டில் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 329 மத்தியஸ்த சபைகள் தாபிக்கப்பட்டுள்ளதுடன், 8400க்கும் மேற்பட்டவர்கள் மத்தியஸ்தர்களாக சேவை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .