2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

3 மணிநேரம் வாசிப்பு

Kogilavani   / 2016 நவம்பர் 11 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு - செலவுத்திட்ட (பாதீடு) யோசனைகளை முன்வைத்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை (10) 3 மணி 10 நிமிடங்கள் உரையாற்றினார்.   

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுப் பிற்பகல் 2 மணிக்குக் கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறவடைந்ததன் பின்னர் தேசிய உடையை அணிந்திருந்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவைக்குப் பிரவேசித்தார். படைகல சேவிதர்கள் இருவரும் தங்களுடைய சீருடைய அணிந்திருந்தனர்.   

வரவு - செலவுத்திட்டம் மீதான யோசனைகளை முன்வைத்துப் பிற்பகல் 2.03க்குத் தனது உரையை ஆரம்பித்த நிதியமைச்சர், மாலை 5.10க்கு உரையை நிறைவுக்குக் கொண்டுவந்தார்.   

அந்த பேக்கிலிருந்து கோவைகளை எடுப்பதற்கே நிதியமைச்சருக்குச் சில நிமிடங்கள் எடுத்தன. இதன்போது அவையிலிருந்த ஒன்றிணைந்த எதிரணியினர் ‘வற்’ இல்லை என்று பலத்த குரலில் கேட்டதுடன், ஒருவரையொருவர் பார்த்து சிரித்தும் கொண்டனர்.   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் நேரகாலத்துடனேயே அவைக்குள் வந்துவிட்டனர். ஆளும் கட்சியின் பக்கம் மட்டுமின்றி எதிரணியின் பக்கத்தில் இருந்த ஆசனங்களும் நேரகாலத்துடனேயே நிரம்பியிருந்தன.   

இந்நிலையில், பிற்பகல் 2:15 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவைக்குள் பிரவேசித்தார். எவ்விதமான ஆரவாரங்களும் இன்றி, ஜனாதிபதி அவைக்குள் உள்நுழைந்தமையால், ஜனாதிபதி வந்ததே பலருக்குத் தெரியாமல் இருந்தது.

ஜனாதிபதி தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டதன் பின்னர், பிரதமரும் ஜனாதிபதியும் சில நிமிடங்கள் ஏதோ கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் தங்களுடைய ஆசனத்துக்கு அருகில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அழைத்த ஜனாதிபதி, பிரதமர் அவருடனும் சுமார் 5 நிமிடங்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.   

வரவு-செலவுத்திட்ட யோசனைகள் வாசித்து நிறைவடையும் வரையிலும் அவையிலிருந்த தமிழ் உறுப்பினர்கள் தங்களுடைய செவிப்பின்னியைப் போட்டுக்கொண்டிருந்தனர். அமைச்சர் மனோ கணேசன் வழமையை விடவும் தேசிய உடையிலேயே அவைக்கு வந்திருந்தார்.   

மக்கள் கலரியானது, நேற்றையதினம் நிரம்பியிருந்ததுடன், அதிலேயே வெளிநாட்டு அதிகாரிகள் தரத்திலானவர்கள் அமர்ந்து இருந்தனர். சபாநாயகரின் கலரியானது வெறிச்சோடிக் காணப்பட்டது. அந்த கலரியில் 10 அல்லது 15 ஆசனங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன.   

வரவு - செலவுத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்படும் போது, சபாநாயக்கர் கலரி நிரம்பியிருக்கும் அந்தக் கலரியில் 9 மாகாணங்களின் முதலமைச்சர்களும் தூதுவர்களும் அமர்ந்திருப்பர். எனினும், முதலமைச்சர் எவரும் நேற்றைய தினம் சமுகமளிக்கவில்லை. அந்தக் கலரியில் இருந்தவர்களில் பலர், தூதரக அதிகாரிகள் மட்டத்திலானவர்களே தெரிந்தனர்.   

திட்ட முன்மொழிவுகளை வாசித்துக்கொண்டிருந்த போது, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிக்களான தினேஷ் குணவர்தன மற்றும் பந்துல குணவர்தன இரண்டு தடவைகள் எழுந்து, யோசனைகள் அடங்கிய ஆவணங்கள் எங்கே? அதனைத் தாருங்கள் என்று கேட்டனர்.   

இதன்போது குறுக்கிட்ட சபாநாயங்கர், தயவுசெய்து இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.   
இந்நிலையில், பிற்பகல் 2.45 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவையிலிருந்து எழுந்து சென்றார். தான் போகும் போது பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவையும் அழைத்துக்கொண்டே சென்று விட்டார்.  இதேவேளை, பிற்பகல் 2.55க்கு ஜனாதிபதியும் தனது ஆசனத்திலிருந்து எழுந்து வெளியே சென்றார். இதன்போது, ஆளும் சட்சி உறுப்பினர்கள் தங்களுடைய ஆசனங்களிலிருந்து எழுந்து மரியாதை செலுத்தினார்.   

முன்னாள் ஜனாதிபதியும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, நேற்று மாலை 4.40க்கே வருகைதந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .