2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘மஹிந்தவை நாடி நிற்கிறோம்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன்

“நிரந்தரத் தீர்வுக்கான பயணத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான
இரா.சம்பந்தன் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தொகுதி திறப்புவிழா, நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“களுவாஞ்சிகுடி என்றதும் இராசமாணிக்கத்தின் ஞாபகம்தான் எனக்கு வருகின்றது. அவருடன் சிறையில் நான் இருந்துள்ளேன்.   

பேச்சுவார்த்தை மூலமாக, ஒரு சமரசமாக, புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக, நாங்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். இதனூடாக, ஒரு நிரந்தரமான நீதியானத் தீர்வை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் சம உரிமை அடிப்படையிலான ஒரு சமாதானத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகின்றோம்.   

இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் யாப்பின் ஊடாக, பிரிவினையை ஏற்படுத்த நாங்கள் முயற்சிக்கின்றோம் என்று கூறியிருந்தார்.   

உண்மையைக் கதைக்க வேண்டும். இதுவரையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், ஓர் உடன்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அது என்னவென்றால், ஒருமித்த நாட்டுக்குள், பிரிக்கப்படாத நாட்டுக்குள், பிரிக்கப்பட முடியாத நாட்டுக்குள் ஒரு தீர்வு உருவாக்கப்பட வேண்டும என்பதாகும். அதனையே நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.   

அதாவது நாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாகவே அது அமையவேண்டும். நிச்சயமாக பிரியாத, பிரிக்கப்பட முடியாத, மக்கள் அனைவரும் நிரந்தரமாக, ஒன்றாய் இருக்கக்கூடிய தீர்வாகவே அத்தீர்வு அமையவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.   

எனவே, மக்கள் மத்தியில் துவேஷத்தை கிளப்பாமல், பிரிவினையை ஏற்படுத்தாது, மக்களை ஒற்றுமைபடுத்தி, எழுபது வருடகாலமாக தீர்க்கப்படாமால் இருக்கின்ற, தேசியப் பிரச்சினைக்கு ஒரு நிரத்தரமான தீர்வினைக் காண்பதற்காக நீங்களும் உதவவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்கின்றேன். இது உங்களின் கடமையாகும். இந்தச் சந்தர்ப்பத்தினை தவறவிடவேண்டாம் எனக்கேட்டுக் கொள்கிறேன்”என, அவர் இதன்போது தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X