2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே’

Princiya Dixci   / 2016 நவம்பர் 02 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

குற்றமிழைத்தது யாராக இருப்பினும், சட்டத்தின்படி அவர்களுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கியின் முன்னாள் பிரதான உயர் அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பொது முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். 

“மத்திய வங்கியின் முன்னாள் பிரதான உயர் அதிகாரிகளுக்கும் முதன்மை முகவர்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், அவர்களுடன் இடம்பெற்ற கணக்கு - வழக்குகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன” என்றும் அவர் கூறினார். 

கோப் அறிக்கை குறித்து அலரி மாளிகையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஆற்றிய சிறப்பு அறிவிப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் அங்கு உரையாற்றுகையில், “இனிவரும் காலங்களில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில், முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்ததுள்ளதைப் போல, கடந்த காலங்களில் செய்யப்பட்ட சகல முறைகேடுகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சிறியது, பெரியது என்று இல்லை, சகல மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அமைச்சர்களைக் கொண்டு வந்து விசாரிக்க முடியாது என்று சில இடங்களில் கூறுகின்றனர். நாம் அப்படிச் சொல்லவில்லை. யாராக இருந்தாலும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

சிறு பிள்ளையொன்று பசி தாங்க முடியாமல், வாழைப்பழத்தை திருடிச் சாப்பிட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்து தண்டனை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருந்தால், அதனைவிட பாரிய தவறுகளை செய்தவர்கள், சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும், சுதந்திரமாக இருக்க முடியாது. முறைகேடுகள் தொடர்பில் நீதி முறைகளுக்கு அமைய விரைவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என்றார். 

 “நாட்டில் உள்ள சகலரும், நீதியின் முன் சமமானவர்கள். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 100 நாட்களுக்குள் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, நீதியை சுயாதீனமாக நடைமுறைப்படுத்த, ஆணைக்குழுவை உருவாக்கினோம். 

அதற்கு முன்னின்று ஒத்துழைத்த கட்சி என்ற ரீதியில் நாம் பெருமையடைகின்றோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதேபோல, பிணைமுறிக் கணக்குகள் தொடர்பிலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. 

அதனை விசாரித்து, அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க கோப் குழு நடவடிக்கை எடுத்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கோப் குழுவில், பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன்போது பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. பல்வேறு கட்சிகளின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டன. 

இது தொட்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், கோப் அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, குறித்த அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்புமாறு, நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் ஊடாக, நாட்டின் நீதிக்கு முன்னர் சகலரும் சமமானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. யாரையும் பாதுகாப்பதற்கு நாம் தயாராக இல்லை. நாட்டின் சாதாரண நீதி முறைக்கு அமைய, யாராவது குற்றமிழைத்திருந்தால், தண்டனை பெற்றுக்கொடுக்க நாட்டின் நீதிமுறையில் இடமுள்ளது. 

இந்த நிதி மோசடிகள் எவ்வாறு இடம்பெற்றன என்பது தொடர்பில் சட்டமா அதிபரின ஊடாகவும் அதற்கு அடுத்த நிலைகளுக்கும் செல்ல இடமுள்ளது. அதற்கான இடத்தை நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்” என அவர் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .