2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'வரலாற்றுப் புத்தகங்களை ஒப்புநோக்குமாறே கோரினர்'

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

"தமிழ் வரலாறு பாடப்புத்தகங்களைத் தயாரிப்பது தொடர்பிலான ஆலோசனைகளை கேட்டால், அதனைச் செய்துகொடுப்பதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம். ஆனால், தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மொழிபெயர்ப்புச் செய்யவோ அல்லது செம்மைப்படுத்தேவோ கோரினால், அதனை செய்துகொடுக்க முடியாது" என, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன் கூறியுள்ளார்.

தமிழ் வரலாறு பாடப்புத்தகத்தில், தமிழர் வரலாறு புறக்கணிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் எழுந்து சர்ச்சை தொடர்பில் ஆராய்வதற்காகக் கல்வியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட கல்வியமைச்சின்  அதிகாரிகள், "வரலாற்றுப் பாடம் தொடர்பாக தமிழ்ப் பேராசிரியர்கள் பலருக்கும் கடிதம் அனுப்பி, இந்தப் பாடவிதானம் தொடர்பாக தங்களுடைய பங்களிப்பை பெற்றுத் தருமாறு கோரியிருந்தோம். ஆனால், அவர்கள் யாரும் இந்த விடயம் தொடர்பாக எமக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை.  இதன் காரணமாக இவ்வாறான குறைபாடுகள் எற்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் பேராசிரியரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, "கல்வியமைச்சின் அதிகாரிகள் கூறியதைப் போன்று, எமக்குக் கடிதம் ஒன்றும் வரவில்லை. ஆனால், கல்வியமைச்சில் பணிபுரிகின்ற பெண் ஊழியர் ஒருவர், எனக்கு  அழைப்பை ஏற்படுத்தி, மொழிபெயர்க்கப்பட்ட வரலாற்றுப் புத்தக்கத்தைச் செம்மைப்படுத்தி, ஒப்புநோக்கித் தருமாறு கோரினார். அதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம். மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமென்றாலும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் நாமே பொறுப்புக்கூற வேண்டும். இதனைக் கருத்திற்கொண்டே நாம், அதனை மறுத்துவிட்டோம்" என்றார்.

"இலங்கை என்பது, பல இன மக்கள் வாழும் நாடு, பல்வேறு வகையான கலாசார அம்சங்களைக் கொண்ட நாடு. ஆனால், பெரும்பான்மை சமூகம், இதனை தங்களது நாடாகவே கருதுகின்றது. கல்வித் திணைக்களங்களில் உள்ளவர்களும், இத்தகைய மனநிலையுடனேயே இருக்கின்றனர். வரலாற்றுப் பாடங்களில், ஆரம்ப காலம் தொட்டே, இத்தகைய நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகின்றது" என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .