Freelancer / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸ் திணைக்களத்திலுள்ள ஒரு குழுவினர் திட்டமிட்டுத் திசைதிருப்பவும், தவறான திசைக்குக் கொண்டு செல்லவும் முயற்சிப்பதாகத் தான் சந்தேகிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) அன்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் புதிய விசாரணைகளை நாங்கள் பாராட்டுகின்றோம். கட்சி பேதமின்றி இதற்காக அரசாங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். குறிப்பாக, சுரேஷ் சலே போன்றவர்கள் கைது செய்யப்படுவார்களா என்ற சந்தேகம் நிலவிய சூழலில், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கின்றோம்.
இதேவேளை, 2021-22 காலப்பகுதியில் 'வேட்டை' என்ற பெயரில் ஒரு புத்தகத்தைப் பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) வெளியிட்டிருந்தார். அவர் அத்தகைய புத்தகத்தை எழுதக்கூடிய நிலையில் உள்ளாரா என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். உண்மையில், அந்தப் புத்தகத்தை ரொஹான் குணரத்ன என்பவரே எழுதியுள்ளார் என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன். ஒரு நபர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ரொஹான் குணரத்ன எழுத, அதனைப் பிள்ளையான் வெளியிட்டுள்ளார். தற்போது உதய கம்மன்பில வெளியிட்டுள்ள புத்தகம் தொடர்பிலும் எமக்கு அத்தகைய சந்தேகங்கள் உள்ளன.
பிள்ளையானின் புத்தகத்திற்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்காக, 'திரிபொலி பிளட்டூன்' குழுவுடன் தொடர்புடைய ஓட்டமாவடியைச் சேர்ந்த கலீல் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 2015-2019 காலப்பகுதியில் கலீலும் பிள்ளையானும் ஒன்றாகச் சிறையில் இருந்தவர்கள். உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை முறையாக நடத்த ஜனாதிபதி மட்டத்தில் ஆர்வம் இருந்தாலும், பொலிஸார் மீது என்னால் முழுமையான நம்பிக்கை வைக்க முடியாது. பொலிஸில் உள்ள ஒரு குழுவினர் இன்றும் இந்த விசாரணையைத் திசைதிருப்ப முயற்சிப்பதாகச் சந்தேகிக்கின்றேன்.
நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களில் 'இஸ்மாயில் இசாக்' என்பவர் தொடர்பான தகவல்கள் உள்ளன. ஆனால், அவர் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி சவூதி அரேபியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார். சாட்சியாளர்கள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சந்திக்கும் போது, கீழ்மட்ட அதிகாரிகள் அதனைத் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.
சாரா ஜெஸ்மின் விவகாரத்தில், தன்னிடம் மூன்றாவது முறையாக டி.என்.ஏ பரிசோதனை செய்யப்படவில்லை என அவரின் தாய் கூறியுள்ளார். அப்படியாயின், மூன்றாவது டி.என்.ஏ யாருடையது? சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாக அமைச்சர் கூறியிருந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாகப் பொலிஸார் தற்போது அவரின் தாயிடம் கூறியுள்ளனர். இவ்வாறான முரண்பாடுகள் விசாரணையில் உள்ள சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன. சனல்-4 வெளியிட்ட ஆவணப்படத்துடன் சேர்த்து, அதற்கு முன்னதாக வெளிவந்த ஆவணப்படங்கள் குறித்தும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்," என்றார்.
11 minute ago
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
2 hours ago