2025 மே 09, வெள்ளிக்கிழமை

“11 பேரை விடுதலை செய்தது செல்லாது”

Mithuna   / 2024 ஜனவரி 09 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 11 பேரும் கடந்த 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி குஜராத் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்தினா, உஜ்ஜால் புயான் ஆகியோர் தலைமையிலான நீதிபதி அமர்வு விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையில் குஜராத் அரசு தரப்பில், கடந்த 2008-ம் ஆண்டு தண்டனை பெற்ற 11 பேரும் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். 1992-ம் ஆண்டில் தண்டனை குறைப்பு விதிகளின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில், குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அவர்கள் எந்த விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்? ஏற்கனவே தண்டனை குறைப்பு செய்யப்பட்ட பிறகு மீண்டும் எப்படி தண்டனை குறைப்பு செய்யப்பட்டது?

1992-ம் ஆண்டு தண்டனை குறைப்பு கொள்கை எந்த அளவுக்கு மற்ற கைதிகளுக்கு பயன்பட்டது என்றும், இது எவ்வளவு தூரம் செயல்படுத்தப்படுகிறது என்றும், இது சம்பந்தமான தெளிவான தகவல்களை தர வேண்டும் என்றும் குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

மேலும், 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குஜராத் அரசு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் ?

வழக்கு விசாரணை நடைபெற்றது மகாராஷ்டிரா மாநிலம். வழக்கு விசாரணை நடைபெற்று தண்டனை அறிவிக்கப்பட்ட மாநிலம்தான் குற்றவாளியின் மன்னிப்பு மனுவை விசாரிக்கும் தகுதியுடையது.

அதனால் மகாராஷ்டிர மாநில அரசுதான் உத்தரவு பிறப்பிக்க முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X