2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

12 இலட்சம் முன்பதிவுகள் இரத்து

Freelancer   / 2025 ஏப்ரல் 26 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 இலட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை இரத்து செய்துள்ளனர்.

இந்தியாவின் சொர்கபூமியாகக் கருதப்படுவது காஷ்மீர். இதன் ஒரு பகுதியாக அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம் உள்ளது. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த பஹல்காம், இந்தியாவின் ’மினி சுவிட்சர்லாந்து’ என்றழைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 22இல் இங்கு திடீர் என 3 பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த சுமார் ஆயிரம் சுற்றுலா பயணிகளை வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 உயிர்கள் பரிதாபமாகப் பலியாகினர்.

இந்த தாக்குதல் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வர திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை இரத்து செய்துள்ளனர்.

இவர்கள் முன்கூட்டியே செய்திருந்த 12 இலட்சத்துக்கும் அதிகமான தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களின் பதிவுகளை இரத்து செய்துள்ளனர்.

2024ஆம் ஆண்டின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரைப் பார்வையிட 2 கோடியே 36 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 9,500 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இதனால், அம்மாநிலத்தின் தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் நிரம்பியிருந்தன. டாக்சிகள் முன்பதிவு செய்யப்பட்டு, காஷ்மீரின் விற்பனை சந்தைகள் பரபரப்பாக இருந்தன.

இங்குள்ள சுற்றுலாத் துறை மாநிலத்தின் பொருளாதாரத்தில் 8 சதவிகிதம் ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு சுற்றுலா மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இங்குள்ள உணவு மற்றும் தங்கும் விடுதிகள், டாக்சிகள், கடைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள் லாபம் பெறுகின்றன. 

குல்மார்க் பகுதி மட்டுமே 2024இல் ரூ.103 கோடி சம்பாதித்தது.ஆனால், இந்த ஒரு தாக்குதலுக்குப் பிறகு, நிலைமை திடீரென மாறியது.

காஷ்மீருக்கான பயணங்களை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ பயண முகவர்களுக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. வாடகை வாகனங்களின் நிறுவனங்களுக்கும் இதேநிலை.

பஹல்காமின் பயங்கரவாதச் செயலால், அடுத்த 4-5 மாதங்களுக்கு யாரும் காஷ்மீருக்குச் செல்ல விரும்ப மாட்டார்கள் என்ற கருத்து அம்மாநிலத்தவரிடம் காணப்படுகிறது.AN

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X