Freelancer / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, போலியான மின்னஞ்சல் ஊடாக மோசடியான முறையில் பிறிதொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அரசாங்கத்தின் 2.5 மில்லியன் டொலர் நிதி, போலியான மின்னஞ்சல் ஒன்றின் மூலம் அடையாளம் தெரியாத கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருவதாகவும், கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை என்ன சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து ஜனாதிபதி நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தற்போது நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதி அமைச்சின் செயலாளருமே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், நான்கு அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜனாதிபதி இதிலிருந்து கைகளைக் கழுவிவிட முடியாது என்றும், புதிய சட்டத்தின்படி கடன் கொடுப்பனவுகள் திறைசேரி ஊடாகவே நடைபெறுவதால் இந்த நிதி மோசடிக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கப்பல் கொள்கலன் மோசடி மற்றும் நிலக்கரி கொள்வனவு மோசடி போன்றவற்றைப் போலவே, இந்த நிதி மோசடியையும் மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய நாமல் ராஜபக் ஷ, தரம் குறைந்த நிலக்கரியை இறங்குமதி செய்து அதன் நட்டத்தை மக்கள் மீது சுமத்துவதாகவும், உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்த நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊழல்களை விசாரிப்பதாகக் கூறி நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் உண்மைகளை மறைப்பதற்கும் காலத்தை இழுத்தடிப்பதற்கும் மாத்திரமே பயன்படுவதாகத் தெரிவித்த அவர், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு பின்னணியில் பாரிய கொள்ளைகளைச் செய்யும் அரசியலை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மோசடிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை நாம் விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்துவோம் என்றும் மேலும் தெரிவித்தார். (a)
18 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
49 minute ago