2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஓகஸ்ட் 18இல் புதிய அரசாங்கம்

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமரை காப்பற்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை அடகு வைக்கும் அரசாங்கம் ஒன்றின் மூலமான எதிர்கால பலன் என்ன?. ஓகஸ்ட் 18ஆம் திகதி நாங்கள் நிச்சயமாக புதிய அரசாங்கத்தை அமைப்போம்' என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதல் பிரசாரக் கூட்டத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்த கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இணங்கியதாகவும் அவர் கூறினார். 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சுசில், 'ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் 260 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான், தினேஷ் குணவர்தன, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க இணக்கம் காணப்பட்டது' என்றார். 

'தேர்தல் பிரசார நடவடிக்கை குழுவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கவும் ஜனாதிபதி இணங்கினார். இதனடிப்படையில் அதனை கடந்த 3ஆம் திகதி மஹிந்தவுக்கு அறிவித்தோம். ஐ.ம.சு.கூ.வின் இணக்கத்துக்கு  அமையவே நான் அந்த அறிவிப்பை வெளியிட்டேன்' என்றும் சுசில் கூறினார். 

வேட்புமனுவை தயாரிப்பது, தேர்தல் ஆணையாளருடன் செயற்பாடுகளை முன்னெடுப்பது கட்சியின் செயலாளரது கடமையாகும்.  தேசியப் பட்டியலில் பெயர் இல்லாத, தேர்தலில் போட்டியிடாத எவரையும் வெற்றிடமான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்க முடியாது.

பொதுப் பரீட்சைகள் நடைபெறும் போது தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. எனினும், இம்முறை உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் போது பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. பிரதமரை காப்பாற்றும் எண்ணத்தில், பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்திற்கொள்ளாது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரை காப்பற்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை அடகு வைக்கும் அரசாங்கம் ஒன்றின் மூலமான எதிர்கால பலன் என்ன?' என அவர் மேலும் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X