2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

60 மாதங்களில் புதிய நாடு: ஐ.தே.மு

Menaka Mookandi   / 2015 ஜூலை 24 , மு.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச குடும்பத்தை உருவாக்கவேண்டிய தேவை எனக்கில்லை. சகல குடும்பத்தையும் வாழவைக்கவே வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 19ஆவது திருத்தத்தை மேலும் திருத்துவதாகவும் தற்போதுள்ள அரசியலமைப்பு மன்றை, அரசவை என பெயர் மாற்றவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்குவதற்கான 'நட்புமிக்க செயன்முறை' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் விகாரமகாதேவி வெளியரங்கில் வைத்து நேற்று (23)  வெளியிடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மகா சங்கத்தினர், ஆதரவாளனர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அந்த விஞ்ஞாபனத்தில் 'பொருளாதாரத்தை மேம்படுத்தல்', 'மோசடியை துடைத்தெறிதல்', 'சுதந்திரத்தை உறுதிப்படுத்தல்', 'உட்கட்டமைப்புகளுக்காக முதலீடு', 'கல்வியை மேம்படுத்தல்' உள்ளிட்ட விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன.

அங்கு பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், ''எனது எதிர்காலத்தை உறுதிப்படுத்தவேண்டிய தேவை எனக்கில்லை. உங்களுடைய எதிர்காலத்தையே உறுதிப்படுத்த வேண்டும்.

ஜனவரி 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சியின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட 100 நாட்கள் வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களிக்கவேண்டும்.

அரச மாளிகையை உருவாக்கவேண்டிய தேவை எனக்கில்லை, உங்கள் அனைவருக்கும் வீடு, வாசல், வயல்களை வழங்கி உங்களுடைய இராஜ்ஜியமாக்க வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

அரசவையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சியினருடன் சிவில் சமூக உறுப்பினர்களும் இருப்பர் என இந்த கட்சி கூறியுள்ளது.

அரச நிர்வாகத்தில் சிவில் சமூக உறுப்பினர்களுக்கு முக்கிய பாத்திரம் வழங்கப்படும் என்றார். இதற்காக சிவில் சமூக உறுப்பினரை கொண்ட ஆலோசனை அவையும் நிறுவப்படும். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி கொண்டுவரவுள்ள கொத்தணி கிராம முறைமையிலும் சிவில் சமூக உறுப்பினர் முக்கிய பாத்திரம் வகிப்பர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நிர்வாகத்தில் பங்கு வகிப்பர் எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் ராஜித்த

இங்கு உரையாற்றிய அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, 'ஊழல் தொடர்பில் மிகவும் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். ஊழல், கொலைகள் பற்றிய விவரங்கள் விரைவில் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்' எனக் கூறினார்.

60 மாதங்கள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டமே இது. இதன்படி 60 மாதத்தில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மேல் மாகாணத்தில் மெகா நகரம் அமைக்கப்படும். நாட்டில் 45 பொருளாதார வலயங்களும் 23 மீயுயர் அபிவிருத்தி வலயங்களும் 10 மீன்பிடித்துறை அபிவிருத்தி வலையங்களும் அமையும்.

கல்வித்துறையில் மாற்றங்கள் ஏற்படும். பாடசாலை கலைத்திட்டம் மாற்றப்படும். பாடசாலை கண்காணிப்பு சபை அமைக்கப்படும். சர்வதேச பாடசாலைகள் தேசிய கல்வி முறைமையின் கீழ் கொண்டுவரப்படும். பல்கலைக்கழக அபிவிருத்தி பேரவை உருவாக்கப்படும்.

அயல்நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தக முதலீடு ஒப்பந்தங்கள் செய்யப்படும்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, பௌத்தத்தை சர்வதேச அளவில் பரப்பவென ஒரு நிறுவனத்தை உருவாக்கும். யுத்தத்தின் போது அழிந்த தேவாலயங்கள் புனரமைக்கப்படும். முஸ்லிம் வணக்கத் தலங்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

முஸ்லிம்களின் வியாபாரம், சொத்து என்பன பாதுகாக்கப்படும். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அங்கு குடியமர்த்தப்படுவர்.

அகதியா பாடசாலைகள் விருத்தி செய்யப்படும். இவ்வாறே இந்து சமய விவகாரங்களும் அபிவிருத்தி செய்யப்படும். இந்தக் கட்சி அரசாங்கம் அமையின் சகல சமுதாயத்தினரினதும் மனத் தாங்கல்களுக்கும் தீர்வு காணப்படும்.

உள்நாட்டு சட்டங்களுக்கு அமைய மட்டுமே ஐ.நா. அறிக்கை தொடர்பில் செயற்படுவோம். மேலும், மத்திய மற்றும் இரத்தினபுரி நெடுஞ்சாலை அமைப்பு வேலைகள் தொடங்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X