2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘7 பேர் விடுதலையில் ஜனாதிபதியை நிர்பந்திக்க முடியாது’

Editorial   / 2021 ஜூலை 06 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையை அவர் ஆய் செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை தற்போது குடியரசுத் தலைவர் கையில் உள்ள நிலையில், அவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆட்சியில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் சிலர் சட்டச் சிக்கலை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தமிழக அரசு எந்த சட்டச் சிக்கலிலும் சிக்கிக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், நீதிமன்றத்துக்கு எதிராக நீட் குழு அமைக்கப்படவில்லை என்றும் மக்களின் கருத்துக்களை பெறவே இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதை போல் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அவரது தாயார் மனு அளித்தால் இது குறித்து அரசு பரிசீலிக்கும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X