2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

FCIDக்குச் செல்லமுன் பிரதமரை இரகசியமாக சந்தித்தாரா விமல்?

Thipaan   / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடான வாகன கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பொலிஸ் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, விசாரணைக்குச் செல்ல முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள அவரது வாசஸ்தலத்தில், நேற்றுக் காலை 8 மணிக்குச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க, செவ்வாய்க்கிழமை இரவு முதல் கடும் முயற்சிகளை மேற்கொண்ட விமல் வீரவன்ச, நேற்றுக் காலையே, பிரதமரைச் சந்தித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பொலிஸ் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்றுப் புதன்கிழமை சென்றிருந்த அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிக்கச் செல்வதென்பது, திரும்பி வரமுடியாத இடத்துக்குச் செல்வது போன்றதென, செவ்வாயன்று மஹாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றபோது, விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.

அரச வாகனத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். எனினும், விமல் வீரவன்ச கைது செய்யப்படுவதைத் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டுத் தடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

வீடமைப்பு மற்றும் கட்டட நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், பொறியியல் திணைக்களத்தின் வாகனங்களை, முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே, விமல் வீரவன்சவிடம், நேற்று வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .