Editorial / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுஜிதா
அரசு நியமனத்திற்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் சித்த மருத்துவர்கள், சுகாதார அமைச்சரிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதுடன், சுதேச மருத்துவத்தின் ஆற்றல் குறித்துப் பகிரங்க சவாலையும் விடுத்துள்ளனர்.
புறக்கணிக்கப்படும் சுதேச மருத்துவம்: சித்த மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய அரசு அலோபதி (மேற்கத்திய) மருத்துவத்திற்கு வழங்கும் முக்கியத்துவத்தைச் சுதேச மருத்துவத்திற்கு வழங்குவதில்லை எனச் சாடியுள்ளனர். கடந்த ஆண்டு உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த அலோபதி மருத்துவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக உள்ளகப் பயிற்சியை முடித்துவிட்டு காத்திருக்கும் சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவர்களுக்கு இன்னும் நியமனம் வழங்கப்படாதது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தடுப்பூசி தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளுக்குச் சவால்: சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முக்கிய அங்கமான சுதேச மருத்துவத் துறைக்கு எதிரான பாகுபாட்டை நிறுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். "தடுப்பூசி (Vaccination) சேவையைத் தவிர, ஏனைய அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் சுதேச மருத்துவர்களுக்கு உண்டு. இதனைச் சுகாதார அமைச்சருக்கு ஒரு சவாலாகவே முன்வைக்கிறோம்" என அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சந்திப்புக்கு மறுப்பு: கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் சுகாதார அமைச்சரைச் சந்திக்கப் பலமுறை முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் ஊடாகக் கடிதம் அனுப்பியும் இதுவரை எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண காலத்தில் இருந்த மக்கள் தொடர்பு அணுகுமுறை, தற்போதைய அமைச்சரிடம் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சருக்குக் கோரிக்கை: சுகாதார அமைச்சு என்பது பாரிய பொறுப்புடைய ஒரு துறையாகும். எனவே, அமைச்சரவைப் பேச்சாளர் போன்ற மேலதிக பொறுப்புகளை விடுத்து, புறக்கணிக்கப்பட்டுள்ள சுதேச மருத்துவத் துறையில் அதிக கவனம் செலுத்துமாறு அவர்கள் அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நிர்வாகத் தோல்வி: “நாட்டிற்குச் சேவை செய்ய நாம் 7 ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம். மருத்துவம் என்பது தொடர்ச்சியாகப் பயிற்சி செய்ய வேண்டிய ஒரு துறை. எங்களை வேலைக்கு அமர்த்தாமல் வைத்திருப்பது நாட்டின் நிர்வாகத் தோல்வியாகும். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) பணிப்பகிஷ்கரிப்பு காரணமாகச் சேவை வழங்க முடியாத சூழலில், தகுதியுள்ள எங்களைப் பயன்படுத்திக்கொள்ள அரசு முன்வர வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago