2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ISIS இனால் ஆபத்து அதிகம்: பொதுபல சேனா எச்சரிக்கை

Gavitha   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெருமளவிலானோர், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுடன் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக, பொதுபல சேனா மீண்டும் எச்சரித்துள்ளது.

இதனால், நாட்டின் கரையோரங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பிலுள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்தில், நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவ்வியக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதாரண, மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர், தொடர்ந்து தெரிவிக்கையில்,

 'ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைவதற்காக மாலைதீவுகளைச் சேர்ந்த 6 பேர், இலங்கையூடாகச் செல்வதற்கு 2015 ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்குள் மாத்திரம்  முற்பட்டுள்ளனர். இந்நிலை தொடருமாயின், நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் பங்கம் ஏற்படும். ஆகவே, நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டும் என்பதுடன், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தையும் பலப்படுத்த வேண்டும்' என்றார்.

 'மாலைதீவுகளின் பிரஜைகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்;டோர் நாட்டில் உள்ளனர். அவர்களில் எத்தனை பேர், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளனரோ என்று எமக்குத் தெரியாது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக, எமது நாட்டினூடாக மேற்கொள்ளும் நகர்வைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

'எமது நாட்டில், மாட்டிறைச்சிக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழ் வழங்கினால் பரவாயில்லை. பல் துலக்கும் தூரிகைகள்,
பிஸ்கட்கள், சவர்க்காரங்களுக்கும் ஹலால் வரி விதிக்கப்படுகின்றது. இந்த ஹலால் வரியினால் கிடைக்கும் ஆதாயம், ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு செல்கின்றதா?' எனக் கேள்வியெழுப்பினார்.

'எமது நாட்டில் உள்ள இஸ்லாமியச் சகோதரர்கள் மீது எமக்குச் சந்தேகமில்லை. இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளின் மீதே எமக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் ஷூறா சபைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. அந்நிலையில் ஷூறா சபை மீதும் உலமா சபையின் மீதே, எமக்குச் சந்தேகம் எழுந்துள்ளது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .