2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அங்குனகொலபெலஸ்ஸ விவகாரம் ‘நீதியை நிலை நாட்டவும்’

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி. அமி​ர்தப்பிரியா

 

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு, கைதிகளுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தச் சிறைச்சாலையில், நவம்பர் 22ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் காட்சிகள் அடங்கிய காணொளியை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அந்தக் குழுவின் தலைவர் சேனக்க பெரேரா, யுத்தம் இடம்பெற்ற காலத்திலேயே இவ்வாறான காட்சிகளை பார்க்கக்கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மருதானை, சனசமூக நிலையத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,

கைதிகள் மீதான இவ்வாறான ​அசாதாரண சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமையை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

கைதிகள் மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த அவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடொன்றை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, அக்குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா, அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு, சிறைக்காவலர்களே முழுமையாக பொறுப்பேற்கவேண்டுமென வலியுறுத்தியதுடன், “சிறைக்கைதிகளும் மனிதர்களே” என்பது வெறும் பொய்யென்றும், கூறினார்.

கைதிகளைப் பார்வையிடவரும் உறவினர்களின் ஆடைகளைக் கழற்றி, பரிசீலனைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகளின் செயற்பாடுகளை எதிர்க்கவேண்டுமென, அங்கிருந்த அதிகாரிகள் சிலர் தங்களிடம் தெரிவித்தனர் என்றும், அதனையடுத்து மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையின் மீதே, அதிகாரிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்றும் கைதிகள் தெரிவித்துள்ளனர் என்றார். 

சிறைக் காவலர்களை விடவும் அங்கு வி​சேட அதிரடிப்படையினரே கூடுதலாக இருந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ள அவர், கைதிகளைப் பாதுகாப்பதை விடவும், இரத்தத்தைப் பார்ப்பதையே ​அதிகாரிகள் அதிகமாக விரும்பியுள்ளனர் என்றார்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .