2024 மே 06, திங்கட்கிழமை

‘அடையாளங்களைக் கைவிடுவதற்கு தமிழர்கள் தயாரில்லை’

Nirshan Ramanujam   / 2017 நவம்பர் 02 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் மக்கள், இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, இலங்கையர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ தயாராக இல்லை. தமிழ் மக்கள், இலங்கையர்களாகவும் அதேநேரம், தமிழர்களாகவுமே வாழ விரும்புகின்றார்கள்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போ​தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'தமிழ் பேசும் மக்கள் விரும்புகின்ற நியாயமான அரசியல் தீர்வானது, சகோதர சிங்கள மக்களுக்கோ, இந்த நாட்டின் இறைமைக்கோ விரோதமானதல்ல என்பதை இந்தச் சபையின் ஊடாக சகோதர சிங்கள மக்களுக்குக் கூற விரும்புகின்றேன். அந்த வகையில், எமது நியாயமான கோரிக்கையை சகோதர சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்” என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

“இப்போது இன்னுமொரு தேவையற்ற சர்ச்சை உருவாக்கப்பட்டு வருகின்றது. அதாவது, சிங்கள மொழியில் ஒற்றையாட்சியை 'ஏக்கிய ராஜ்ய”  என்றும், தமிழ் மொழியில், ஒற்றையாட்சியை -  ஒருமித்த நாடு என்றும் குறிப்பிடப்பட்டு, ஒரு குழப்ப நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார்.

“அரசின் தன்மை மற்றும் இந்த நாடு பற்றிய வியாக்கியானத்துக்கு  இடையிலான இந்தக் குழப்ப நிலை காரணமாக இன்று எமது நாட்டில் அனைத்து பௌத்த பீடங்கள், சட்டத்தரணிகள் சங்கம், மேலும் பல பொது அமைப்புகள், இடதுசாரிகள், புத்திஜீவிகள் இடையே ஒருவித பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்தக் குழப்பம் ஏன், எதற்காக?” என்றும் அவர் வினவினார்.

“தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கா?  'ஒருமித்த நாடு” என தமிழில் மட்டும் எழுதிவிட்டால் மாத்திரம் தமிழ் மக்கள் தங்களுக்கு எல்லாம் கிடைத்துவிடும் எனத் திருப்திப்பட்டு விடுவார்கள் என நினைத்துக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவா  இவ்வாறு செய்யப்பட்டதா” எனவும் அவர் வினவினார்.

“இல்லை, சிங்கள மக்களுக்குத் தமிழ் தெரியாது என நினைத்தது, சிங்கள மக்களை ஏமாற்றுவதாக எண்ணி இவ்வாறு செய்யப்பட்டதா? இல்லை, சிங்கள மக்களுக்கு தெரிய வந்து, சிங்கள மக்களின் எதிர்ப்புகளை, கோபங்களை தமிழ் மக்கள்மீது திருப்பிவிடலாம் என எண்ணி, திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டதா” என்றும் கேட்டார்.

“1978ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் கடந்த 40 வருடங்களாகப் பாவனையில் இருந்து வருகின்றது. இதுவரை இந்த அரசமைப்புச் சட்டம் 19 திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த கால அனுபவங்கள் அரசமைப்பை மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றார்.

“இந்த நாட்டில், அனைத்து இன மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும், தற்போதைய எமது அரசியல் யாப்பில் இருக்கின்ற, 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை விடவும் முன்னேற்றகரமான அதிகாரப் பகிர்வுகளைக் கொண்ட வகையிலும் முழுமைப்படுத்தப்பட்ட புதிய அரசியல் யாப்பு எமது நாட்டில் நிறைவேற்றப்படுமாயின், அல்லது புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படாமல், தற்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளைவிட முன்னேற்கரமான அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கியதான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமாயின் அதனை நாங்கள் ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்” என்றார்.

“அத்தகையதொரு புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட இயலாத சூழ்நிலை ஏற்படுமானால், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, படிப்படியான அதிகாரப் பகிர்வு நோக்கிய வழிமுறையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X