2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அதிரச் செய்தது ஆவா குழு: அழுதுவிட்டாராம் டக்ளஸ்

George   / 2016 நவம்பர் 10 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

யாழ்ப்பாணத்தில் குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கின்ற ஆவா குழு விவகாரம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டையும் அதிரச்செய்தது.

 வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது.  

இதன்போதே, ஆவாக் குழு தொடர்பில் ஊடகவியலாளர்கள் சரமாரியான கேள்விகளைத் தொடுத்தனர். அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்னவும் சளைக்காது பதிலளித்துகொண்டிருந்தார்.  

அங்கு சமூகமளிததிருந்த ஊடகவியலாளர்கள் ஒருவர், கேள்வி நேரத்தின் போது, ஆவாக் குழு என்றார்.  
கேள்வியை முழுமையாக கேட்பதற்கு முன்னர் பதிலளிக்க ஆரம்பித்த அமைச்சர் ராஜித, “ஆ... ஆங்... ஆவாக் குழுவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவ அதிகாரியொருவருக்குமே தொடர்பு இருப்பதாக நான் தெரிவித்திருந்தேன்.

ஆனால், இராணுவ வீரர்களுக்கு தொடர்பு என்று நான் எப்பொழுதுமே கூறவில்லை. இந்நிலையில், நாட்டை காப்பாற்றிய இராணுவ வீரர்களை நான் காட்டிக்கொடுத்துவிட்டதாக சிலர் பிதற்றுகின்றனர்.  

ஊடகவியலாளர்கள் எக்னெலிகொட, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரை கொன்றவர்கள் எல்லோரும், ‘ரணவிரு’ நாட்டை காப்பாற்றிய இராணுவமாக முடியாது.  
அதேபோல, மனிதப் படுகொலைகள், துஷ்பிரயோகம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எல்லோரும், நாட்டைக் காப்பாற்றிய இராணுவம் ஆகிவிடமுடியாது” என்றும் சுட்டிக்காட்டினார்.   

“முன்னாள் கடற்படை தளபதியின் கீழிருந்த கோப்ரல் ஒருவர், தமிழ் இளைஞர்களைக் கடத்தி கப்பம் பெற்றுவிட்டு, படுகொலைச் செய்த சம்பவங்களும் இருக்கின்றன.   

ஆனால், ஆளுநரும் பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சரும் (ருவன் விஜயவர்தன), ஆவா குழுவுடன் இராணுவத்துக்கு சம்பந்தமில்லை என்று விளக்கம் கொடுத்துகொண்டிருக்கின்றனர்.   

இந்தக்குழுவுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரியையும் எனக்குத் தெரியும். அவருடைய பெயரும் எனக்கு தெரியும்” எனவும் அமைச்சர் கூறினார்.   

குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை குறிப்பிடும் நீங்கள், அந்த அதிகாரியின் பெயரை ஏன்? சொல்லமுடியாது. சொல்லுங்கள் சொல்லுங்கள் எனக்கேட்டனர்.  

“எனக்கு, தெரியும்... இந்த விவகாரம் தொடர்பில் இன்று (நேற்று) அதிகாலை 1 மணிவரையிலும் தொலைபேசியில் கதைத்துகொண்டிருந்தேன்” என்றபோது குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், அப்படியாயின் அந்த அதிகாரியின் பெயரை கூறுமாறு கேட்டனர்.  

“நான்... சொல்லமாட்டேன். நாளை (இன்று) முழுவிவரமும் கிடைக்குமென அமைச்சர் கூறுகையில், அப்படி எப்படியென ஊடகவியலாளர்கள் குறுக்குகேள்வியை எழுப்பினர்.  

“அந்த அதிகாரி, விடுமுறையில் சென்றிருக்கின்றார். நாளை(இன்று) கட்டாயமாக தகவல் கிடைக்கும்” என்றும் அமைச்சர் பதிலளித்தார்.  

“ஆவாக் குழுவின் பின்னணியில், டக்ளஸ் தேவானந்தா (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பியுமாவார்) இருப்பதாக தகவல்கள் அடிப்பட்ட போது, அவரை நான் ஏசிவிட்டேன்.   

வடக்கில் படுகொலைகள் இடம்பெற்ற போதும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் மற்றும் ரவிராஜ் ஆகியோர் படுகொலைச்செய்யப்பட்டபோதும் டக்ளஸை நான் தூற்றினேன். அந்தப் படுகொலைகளை எல்லாம் டக்ளஸின் தலையிலேயே அன்று போட்டுவிட்டனர் என்பது. அவர், கண்ணீர் வடித்தபோதுதான் நான் உண்மையை அறிந்துகொண்டேன்.  

அதன்பின்னர்தான் ஆவாக் குழுதொடர்பிலான விவரங்கள் வெளிவரத்தொடங்கின” என்றார்.  
இடைமறித்த ஊடகவியலாளர்கள், இராணுவ அதிகாரிக்கு தொடர்பு உள்ளதாக, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்துக்கு இன்று(நேற்று) அறிக்கையிட்டுள்ளரே என்று கேள்வியை எழுப்பியபோது,  
அந்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு வருகைதந்திருந்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன,   

“இந்த குழுவுடன் தொடர்பு பட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் இராணுவத்தைச் சேர்ந்தவர் இருப்பதாக அறிக்கையிடப்படவில்லை. அவ்வாறு இருப்பார்களாயின் எங்களுக்கு அறிக்கையிடப்படும்” என்றார்.   

மீண்டும் பதிலளித்த அமைச்சர் ராஜித, “வடக்கை குழப்பவேண்டும் என்பது ராஜபக்ஷர்களின் தேவையாகும், சிங்கள தீவிரவாதிகளையும், முஸ்லிம் தீவிரவாதிகளையும் உசுப்பேத்திவிட்டு, நாட்டுக்கு தீ மூடி அதிலிருந்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.  

மஹிந்த, கோட்டா சொன்னதற்கு, இராஜங்க அமைச்சர் எதனையுமே கூறவில்லை. நான், 3ஆவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தான், மஹிந்த யாரென்று தெரியுமென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  

அந்தச் சவாலை எதிர்கொண்டுதான் நாங்கள், அரசாங்கத்திலிருந்து வெளியேறி, தேர்தலுக்கு முகங்கொடுத்தோம் அதற்காக எம்மில் சிலரும், ஐ.தே.கவில் சிலரும் வியர்வை சிந்தினர். இன்னும் சிலர், அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் இராஜங்க அமைச்சராக ஜனாதிபதி மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்யும் வரையிலும் என்ன நடந்ததென்றே அவர்களுக்கு தெரியாது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .