2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

“அனைத்து இனத்திலும் சிறுவயது திருமணம் நடக்கிறது”

Editorial   / 2025 மார்ச் 18 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சிங்களவ​ர்களில்  21,510 பேர்

இலங்கை தமிழர்களில் 3,925 பேர்

 மலையக மக்களில் 1,312 பேர்

முஸ்லிம்களில் 4,321 பேர்

இலங்கையில் அனைத்து இனத்தவர்களிடத்திலும் சிறுவயது திருமணம் நடக்கின்றது.இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி பேசி வருவதன்  பின்னணியில் அரசியல் சதித்திட்டம் இருக்கலாம் என  ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி முஜிபுர் ரஹ்மான் சந்தேகம் வெளியிட்டார்.

சிறுவயதுத்   திருமணங்கள் தொடர்பில் புள்ளிவிபர திணைக்களம் இறுதியாக 2012ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் தகவல்களையும் சபைக்கு சமர்ப்பித்தார்.

 பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (17)  இடம் பெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு -செலவுத் திட்டத்தின்   புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு  ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறக்கூடிய சிறுவயது  திருமணங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி தற்போதைய அரசிலுள்ள அமைச்சர் ஒருவர் கதைத்திருந்தார். அதேபோன்று  அர்ச்சுனா  எம்,பியும் இந்த சபையில் பேசி இருந்தார்.    

ஆனால் சிறுவயதுத்   திருமணங்கள் தொடர்பில் புள்ளிவிபர திணைக்களம் இறுதியாக 2012ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் பிரகாரம், 17 வயதுக்கு குறைந்த வயதில் திருமணம் முடித்தவர்களின் இன அடிப்படையில் பார்ப்போமானால், சிங்கள இனத்தவர்களில்  21,510 சிறுவயது திருமணங்கள்  இடம்பெற்றுள்ளன . அது நூற்றுக்கு 69 சதவீதமாகும்.

 

இலங்கை தமிழ் இனத்தவர்களில் 3,925 சிறுவயது  திருமணங்கள் இடம்பெற்றுள்ளன . அது நூற்றுக்கு 13 சதவீதமாகும். மலையக மக்களில் 1,312 சிறுவயது  திருமணங்கள்  இடம்பெற்றுள்ளன . அது நூற்றுக்கு 8 சத வீதமாகும். அதேநேரம் முஸ்லிம் இனத்தவர்களில் 4,321சிறுவயது  திருமணங்கள்  இடம்பெற்றுள்ளன . அது நூற்றுக்கு 14 சதவீதமாகும்.

இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் சிறுவயது திருமணம் அனைத்து இன சமூகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அப்படியானால் இது ஒரு பொதுப் பிரச்சினை.அவ்வாறிருக்கையில் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி பேசுவதாக இருந்தால் அதன் பின்னணியில் வேறு சதித்திட்டங்கள் அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது

அதேநேரம் இந் நாட்டில் ஒரு சட்டம்தான் இருக்க வேண்டும் என அர்ச்சுனா எம்.பி   தெரிவித்திருந்தார். இந்த நாட்டில்  பல இன மக்கள் வாழுகின்றனர். அந்த இனங்களுக்கு தனியார் சட்டங்கள் இருக்கின்றன. முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டம் இருக்கிறது. கண்டியில் இருக்கும் மக்களுக்கு மலைநாட்டு சட்டம் இருக்கிறது. தமிழ் மக்களுக்கு தேசவழமை சட்டம் இருக்கிறது. இந்த சட்டங்கள் நாட்டில் இருக்கவேண்டும். அந்த மதங்களுக்கு என சில தனியான அடையாளங்கள் இருக்கின்றன. அதனால் இவ்வாறான சட்டங்கள் இருந்தால்தான் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். அந்த சட்டங்களை யாரும் நிராகரித்ததில்லை.

ஆனால் அர்ச்சுனா எம்.பி. தொடர்ந்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தை எதிர்த்து பேசிவருகிறார். அப்படியானால் தேசவழமைச் சட்டம் அவர்களுக்கு தேவையில்லையா? அந்த சட்டத்தை நீக்கவேண்டும் என்றா தெரிவிக்கின்றார்?  சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு இன்னுமொரு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசுவது கவலையளிக்கிறது. இந்த நாட்டில் இதற்கு முன்னரும் தற்போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஏனைய சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசியதில்லை . இன்னொரு இனத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததும் இல்லை.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .