2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அனைத்து வழக்குகளும் எனக்கு சமமானவை

Freelancer   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் வழக்கு இன்று (07) எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, தமது சேவை பெறுநர் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டிருப்பதால் வழக்கின் சாட்சிய விசாரணையை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு, பாட்டலி எம்.பியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சரத் ஜயமான்ன மன்றுக்கு அறிவித்தார்.  

சாட்சிய விசாரணை பல சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், குறுகிய காலத்துக்குள் திகதியை அறிவிக்குமாறு கோரிநின்றார்.

இதன்போது, அனைத்து வழக்குகளும் தனக்கு சமமானவை என்றும் விசேட வழக்கு இல்லை என்றும் நீதிபதி அறிவித்தார்.

இரு தரப்பினருக்கும் பொருந்தும் தினத்தைத் தெரிவிக்குமாறு நீதிபதி கோரியதையடுத்து, ஒக்டோபர் 10 மற்றும் 27ஆம் திகதிகளில் சாட்சிய விசாரணையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க, அவரது சாரதி மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொய்யான சாட்சியங்களை சோடனை செய்தமை, சதி செய்தமை மற்றும் பொய்யான அறிக்கைகளை சமர்ப்பித்தமை ஆகிய  குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் சம்பிக்க மற்றும் பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.         


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .