R.Maheshwary / 2021 மார்ச் 22 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டு இந்நாட்டின் சுற்றாடலைப் பாதுகாக்கவும் பொருளாதாரத்தை முன்னேற்றவும் சுபீட்சத்துக்கான இலக்குடன் புதிய நாட்டை உருவாக்கவும், இதுவரை எவ்வித அரசியலும் செய்யாத நபரை ஜனாதிபதியாக்குவோம் எனும் பாரிய எதிர்பார்ப்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷவை 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதியாக அழைத்து வந்தனரெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். மரிக்கார், ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு வீணாகியுள்ளதுடன் அனைத்தும் செயலிழந்துள்ளன என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
'அரச அதிகாரிகள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் போது அவர்களுக்கு எதிராக மற்றுமோர் அரச தரப்பினர் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் சித்திரங்களை வரைந்து அவற்றைக் காட்சிப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. சுற்றாடல் அழிப்பை ஊடகங்கள் அறிக்கையிட்டால் அவற்றுக்கு எதிராக நேரடி அச்சுறுத்தல் விடுக்கும் நிலை உருவாகியுள்ளது' என்றார்..
தனக்குத் தெரிந்த வரையில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர், 'இது எமது அரசாங்கம்' எனத் தெரிவிப்பது இதுவே முதற்றடவை என்றார்.
இந்த நாட்டில் பக்கச்சார்பின்றி சாதாரண சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரியொருவர் எமது அரசாங்கமெனக் கதைக்கும் போது, இவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் எவ்வாறு சட்டத்தை செயற்படுத்துவர் என மரிக்கார் எம்.பி கேட்டார்.
அதனால்தான், அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்தைக் கொண்டு வந்தால், சர்வாதிகார ஆட்சி உருவாகும் என்று நீதி, சட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும், நியாயத்தை எதிர்பார்க்க முடியாத நாடாக உருவாகுமென நாம் கூறினோம் என்றார்.
இன்று அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இந்த அச்சுறுத்தலையடுத்தே லசந்த விக்கிரமதுங்க, போதல ஜயந்த உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் நினைவுக்கு வருகின்றனர் என்றார்.
எனவே, அச்சுறுத்தலால் அல்லது வெள்ளை வானால் நாட்டை நிர்வகிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், நாட்டுக்காகப் பணியாற்றினால் மட்டுமே நாட்டை நிர்வகிக்க முடியும் என்றார்.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago