2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அலெக்ஸின் வழக்கு 8ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Mayu   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் நவம்பர் மாதம் (19) திகதி உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணம் ​தொடர்பான இன்றைய நீதிமன்றவழக்கில், 30 ற்கும் மேற்பட்ட பொலிஸார் அடையாள அணிவகுப்பிற்காக மன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

எனினும் பிராதான சாட்சியான அலெக்ஸுடன் கைது செய்யப்பட்ட நபர்  சமூகமளிக்காத காரணத்தால் அடையாள அணிவகுப்பு தொடர்பான மேலதீக நடவடிக்கை எதிர்வரும் 8ம் திகதி வௌ்ளிக்கிழமை  மாற்றப்பட்டுள்ளது.

யாழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று(04) நடைபெற்றது.
 
இதன்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நான்கு பொலிஸாரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
இன்றைய தினம் வழக்கானது மேலதிக விசாரணைக்கு நியமிக்கப்பட்ட போதிலும் நீதிமன்று ஏற்கனவே எடுத்த தீர்மானத்திற்கு அமைய அடையாள அணிவகுப்பை நடாத்த தீர்மானித்தது.
 
இருப்பினும் உயிரிழந்தவருடன் இருந்த பிரதான சாட்சி மன்றுக்கு சமூகமளிக்காத நிலையில் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை  (08) காலை 9.30 மணிக்கு நடத்த நீதிமன்று உத்தரவிட்டது.
 
மேலும் தொடர் மரண விசாரணை நாளைய தினம் (05)  செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
 
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தபடுபவர்கள் அனைவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும் எனவும் தோற்றத்திற்கமைய இருக்க வேண்டும் என வலியுறுத்தியபோது மன்று அதனை ஏற்றுக் கொண்டது.
 
பிரதான சந்தேக நபர்கள் சார்பில் அரவிந்த ஹப்பந்தல மற்றும் சர்மினி விக்னேஸ்வரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
 
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் சார்பில் அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட 30ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
 
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு ,சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
 
இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
 
நிதர்ஷன் வினோத் 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X