2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘அலைபேசி உரையாடல்களை இரகசியமாய் பெற்றமை தவறு’

Nirshan Ramanujam   / 2017 நவம்பர் 21 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிர்ஷன் இராமானுஜம்  

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் (கோப்) அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் அலைபேசி உரையாடலை இரகசியமாகப் பெற்றுக்கொண்டமை தவறானது” என, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, சிறப்புரிமை பிரச்சினையொன்றை, நாடாளுமன்றத்தில் நேற்று (20) எழுப்பினார்.

   “இந்த விடயத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியன, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறியுள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

நாடாளுமன்ற அமர்வுகள், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. சபை ஆரம்ப நடவடிக்கைகளின் பின்னர் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால், 2017 நவம்பர் 16 ஆம் திகதியன்று தயாரிக்கப்பட்ட குற்றப் புலனாய்வு அறிக்கையான்றை, விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ளது. 

இந்த அறிக்கையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) 28 உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் பிரகாரம் ஐந்து உறுப்பினர்களுக்கு, அர்ஜுன் அலோசியஸிடமிருந்து அழைப்புகள் வந்துள்ளன. 

இதில் உண்மையான நிலை என்னவென்றால், அர்ஜுன் அலோசியஸ், தமக்கு ஆதரவாக கோப் அறிக்கையில் ஏதும் மாற்றங்களைச் செய்யும் எதிர்பார்ப்பில் இந்த ஐந்து உறுப்பினர்களையும் அழைத்திருப்பதுடன், அவர்களிடமிருந்து எவ்விதமான சாதகமான செயற்பாடுகளையும் பெற்றுக்கொள்ள முடியாமற்போனதாகும். 

ஆணைக்குழுவுக்குக் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரமானது விடயங்களை விசாரணை செய்து அறிக்கையிடுவதாகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இது நீதிமன்றம் இல்லை என்பதுடன், எந்தவொருவரும் தவறு ஒன்றுக்குக் குற்றவாளியாக இனங்காணப்படவும் இல்லை. ஆகக் குறைந்தது இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவரொருவருக்கு எதிராகவும் எந்தவொரு விடயமும் கண்டுபிடிக்கப்படவும் இல்லை.  

குறிப்பாக, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலைபேசி அழைப்புகள் பற்றி இரகசியமாகக் குறித்துக்கொண்ட முறையானது யாருடைய அறிவுறுத்தலின்பேரில் மேற்கொள்ளப்பட்டது என்பதில் எமக்கு சந்தேகம் உண்டு. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் செயலாகும். 

ஆணைக்குழுவால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காத விடயத்தை வைத்துக்கொண்டு, இந்த விவரங்களைப் பகிரங்கப்படுத்தியமை தவறான செயற்பாடாகும். குற்றப் புலனாய்வுத் திணைக்களும் சட்டமா அதிபர் திணைக்களமும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலைபேசி விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு சபாநாயகரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்விரண்டு திணைக்களங்களும் அதனை மேற்கொள்ளவில்லை. 

இதனைக் கருத்திற்கொள்ளாது, இரகசிய விவரங்களை மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகங்கள் உடனடியாகவே இந்த விவரங்களைப் பல்வேறுபட்ட விதத்தில் திரிபுபடுத்தியும் செய்திகளை வெளியிடுகின்றன. 

ஆகையால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, கட்சித் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சபாநாயகரை கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார். 

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்த விவகாரம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .