2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அவைக்குள் நுழைந்த இரண்டு விருந்தாளிகள் விளக்குகளை அணைத்து விரட்டியடிப்பு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 வேட்டுகள் தீர்த்து அரச மரியாதை
நந்தி யானைக்கான பத்திரம் கையளிப்பு
2 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன

அழகன் கனகராஜ்


இலங்கைக்கு விஜயம்செய்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, தலைமையிலான குழுவினருக்கு, காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செலயகத்துக்கு முன்பாக வைத்து நேற்று புதன்கிழமை செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் 19 வேட்டுகள் தீர்க்கப்பட்டு அரச மரியாதையளிக்கப்பட்டது.

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு, நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ தலைமையிலான குழுவினர், எஸ்கியூ468 என்ற விசேட விமானத்தின் மூலம், செவ்வாய்க்கிழமை இரவு 11.55க்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அக்குழுவினரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்றதுடன், விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட விருந்தினர்களுக்கான புத்தகத்தில், பிரதமர் ஜோன் கீ, தன்வரவையும் பதிவுசெய்துகொண்டார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூசிலாந்து பிரதமர் தலைமையிலான குழுவினருக்கு, காலி முகத்திடலில் வைத்து நேற்று புதன்கிழமை காலை 9.25க்கு அரச மரியாதையளிக்கப்பட்டது.

இந்த சிறப்பான வைபவத்தையொட்டி காலி முகத்திடல், நியூசிலாந்து மற்றும் இலங்கை தேசியக் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நியூசிலாந்துப் பிரதமர் தலைமையிலான குழுவினர், குதிரைப்படை சகிதம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அழைத்து வரப்பட்டனர். அதன்போது அவ்வீதியின் இருமருங்குகளிலும், கண்டிய நடனக்கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர்.

இருநாட்டு தேசியகீதங்களும் காலை 9.30க்கு இசைக்கப்பட்டன. அதன் பின்னர், இலங்கை தரைப்படையினரால், 19 வேட்டுகள் தீர்க்கப்பட்டு, நியூசிலாந்துப் பிரதமருக்கு கௌரவமளிக்கப்பட்டது. அக்கௌரவத்தை ஏற்றுக்கொண்டதன் பின்;, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ ஆகிய இருவரின் தலைமையிலான குழுவினர்களுக்கிடையில், இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், இலங்கையில் பண்ணை கூட்டுறவை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் இதர அறிவுகளைப் பெற்றுக்கொள்ளல், வனஜீவராசிகளைப் பரிமாறிக்கொள்ளல் ஆகிய இரண்டு ஒப்பந்தங்கள், காலை 10.35க்கு கைச்சாத்திடப்பட்டன.

பின்னர், இலங்கை ஜனாதிபதியும், நியூசிலாந்துப் பிரதமரும் கூட்டறிகைவிட்டு உரையாற்றினர். அதன் பின்னர், நந்தி என்ற பெயரைக்கொண்ட யானைக் குட்டியை, நியூசிலாந்து ஒக்லன்ட் மிருகக்காட்சிச் சாலைக்கு அன்பளிப்புச் செய்வதற்கான பத்திரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீயிடம் கையளித்தார்.

இவ்வாறான பிரமாண்டமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்குள் இருக்கும் பழைய நாடாளுமன்றத்தின் அவைக்குள், காலை 9.30 மணியளவில் கியூக், கியூக், கியூக்...கியூக்...கியூக் என சத்தம் கேட்டது. அந்த சத்தம், அப்போது அவைக்குள் இருந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஜனாதிபதி செயலக பணியாட்கள், பாதுகாப்பு பிரிவினரை முகஞ்சுழிக்கச் செய்துவிட்டது.

விரைந்து செயற்பட்ட பாதுகாப்பு பிரிவினர், அவைக்குள் ஒளிர்ந்துகொண்டிருந்த சகல விளக்குகளையும் அணைத்து, மரவேலை (தச்சுவேலை) செய்யும் இரண்டொருவரை அழைத்து, அவையின் கூரைக்குக் கீழுள்ள ஜன்னலொன்றை திறந்து மிகவும் இலாவகரமான முறையில், அவ்விரண்டு ஊர்க்குருவிகளையும் விரட்டிவிட்டனர். அதற்கு பின்னரே, விளக்குகள் யாவும் ஒளிரவிடப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .