Editorial / 2026 மே 07 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

தன்னைத் துரத்தியடித்த கணவரை, இன்ஸ்டாகிராம் மூலம் போலி கணக்கு தொடங்கி ஆசை வார்த்தை கூறி வரவழைத்துப் பொலிஸில் ஒப்படைத்த மனைவியின் செயல் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் அருகே உள்ள ஜக்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சோனி திரிபாதி. இவருக்கும் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபுதத் திரிபாதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில காலத்திலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிரபுதத் தனது மனைவியைத் துன்புறுத்தி வீட்டை விட்டுத் துரத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சோனி, கடந்த 4 ஆண்டுகளாகத் தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.
இந்நிலையில், தன்னைத் துரத்திய கணவரைப் பழிவாங்கச் சோனி ஒரு அதிரடித் திட்டம் தீட்டினார். இதற்காக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு போலி கணக்கை உருவாக்கினார். அதில் அழகான வேறொரு பெண்ணின் புகைப்படத்தைப் பதிவிட்டு, தனது கணவருக்கு நட்பு அழைப்பு அனுப்பினார். அது தன் மனைவிதான் என்று தெரியாத பிரபுதத், அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி அவருடன் வலைதளத்தில் பேசத் தொடங்கினார்.
நாளுக்கு நாள் இவர்களது நெருக்கம் அதிகரித்த நிலையில், ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவும் பிரபுதத் சம்மதித்துள்ளார். இதையடுத்துத் தன்னை நேரில் சந்திக்குமாறு சோனி அழைக்க, அது தனது மனைவி என்பது தெரியாமல் பிரபுதத் ஆவலோடு கிளம்பினார்.
கடந்த 2-ம் திகதி தாராகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு வரும்படி சோனி கூறியிருந்தார். அதன்படி, பிரபுதத் தனது நண்பருடன் அங்கு வந்தார். அங்கு சோனி தனது முகத்தைத் துணி மற்றும் கண்ணாடியால் முழுமையாக மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். சற்றுத் தொலைவில் சோனியின் தந்தை மற்றும் சகோதரர் மறைந்திருந்து கண்காணித்தனர்.
அங்கு வந்த பிரபுதத், அருகில் இருப்பது தனது மனைவி என்று தெரியாமல் ஆசையாகப் பேசினார். திடீரென சோனி தனது முகத்திரையை விலக்கினார். அப்போது மனைவியைக் கண்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆத்திரமடைந்த பிரபுதத், சோனியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
உடனே மறைந்திருந்த சோனியின் உறவினர்கள் ஓடிவந்து பிரபுதத்தை மடக்கிப் பிடித்தனர். இது குறித்த புகாரின் பேரில், பிரபுதத்தை பொலிஸார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago