2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

Mayu   / 2026 மே 01 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.

ஒவ்வோர் ஆண்டும் சித்திரைப் பௌர்ணமி தினத்தில், மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக, சுந்தரராஜப் பெருமாள் 'கள்ளழகர்' வேடத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 27ஆம் திகதி தொடங்கியது. விழாவின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை (30), அழகர்மலையடிவாரத்தில் உள்ள கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்பட்டார்.

பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி கோயில் முன்பு, கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் பொற்கொலுவில் எழுந்தருளினார். வழியெங்கும் பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த அவர், நேற்று காலை தும்பாவடியில் 'எதிர்சேவை' கண்டருளினார். பின்னர் புதூர், ஆதிகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் வழியாகச் சென்ற கள்ளழகரை, பக்தர்கள் சர்க்கரை விளக்குகள் ஏந்தி உற்சாகமாக வரவேற்றனர்.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் நள்ளிரவில் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, பொற்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வைகை ஆற்றை நோக்கிப் புறப்பட்டார்.

வௌ்ளிக்கிழமை (01)  அதிகாலை, கள்ளழகர் பொற்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கியபோது, அங்கிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா" என முழக்கமிட்டு வரவேற்றனர். வைகை ஆற்றில் வெள்ளிக் குதிரையில் வந்த வீரராகவ பெருமாள், கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றார்.

கள்ளழகர் மூன்று முறை ஆற்றில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வீரராகவ பெருமாள் மண்டகப்படியில் சிறப்புப் பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

  மதுரை மாநகர காவல் ஆணையர் அபிஷேக் திக்ஷித் தலைமையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. நகரின் முக்கிய மேம்பாலங்கள் மற்றும் மண்டகப்படிகள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

மதுரை மட்டுமன்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்களால் மதுரை மாநகரமே மக்கள் கடலாகக் காட்சியளித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .