2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இதுதான் எங்கள் நிலைமை’

Editorial   / 2017 நவம்பர் 10 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜம்   

“நாடு முழுவதிலும் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆதலால் நாம் நாடாளுமன்றத்துக்குச் சைக்கிளில் வந்தோம். பாதுகாப்பு அதிகாரிகள் எம்மை சைக்கிளுடன் உள்ளே அனுமதிக்கவில்லை. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலாகும்” என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (09) பிற்பகல் 3 மணிக்குக் கூடியது. சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தின்போது, ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அவர், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.   

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தடையின்றி நாடாளுமன்றத்துக்கு வர முடியும். ஆனால், இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களான நாம், சைக்கிளில் வந்தோம். இன்று பெற்றோல் இல்லை, நாடு முழுவதிலும் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுகின்றது.   

“இதனால், நாம் சைக்கிளில் வந்தோம். எனினும், பாதுகாப்பு அதிகாரிகள் எம்மை உள்ளே வருவதற்கு அனுமதி தரவில்லை. இங்கே நாடாளுமன்ற உறுப்பினர்களான எமது சிறப்புரிமை மீறப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில், சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.   

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.   

இதன்போது, எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “உங்களுடைய கார்களின் டயர்களில் காற்று இல்லை. அதுதான் சைக்கிளில் வந்திருக்கிறீர்கள்” எனப் பதிலளித்தார்.   

இதேவேளை, “இந்த விடயம் தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். அதிசொகுசு வாகனங்களுக்கு வரி அறவிடவுள்ளதாக அறிந்து, அவர்கள், சைக்கிளில் வந்திருக்கின்றார்கள்” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.   

வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்த அமைச்சர் மங்கள சமரவீர, “அவர்கள் (ஒன்றிணைந்த எதிரணியினர்) இப்போதே சுற்றாடல் கரிசனை தொடர்பில் எமது வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு ஏற்ப நடக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X