2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 126 பேர் விடுதலை

Kanagaraj   / 2015 நவம்பர் 09 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த  இந்திய மீனவர்கள் 126 பேர், யாழ்ப்பாணம், மன்னாரில் நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களால் 78 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குள் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்ட 59 மீனவர்களைப் பருத்தித்துறை பதில் நீதவான் மா.சுப்பிரமணியம் விடுதலை செய்தார்.

ஊர்காவற்துறை கடற்பிராந்திய எல்லைக்குள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட 19 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் விடுதலை செய்தார்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவின் பெயரில், இந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 41 பேரையும் விடுதலை செய்யுமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, நேற்று திங்கட்கிழமை(9) உத்தவிட்டார்.

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட  இந்திய மீனவர்கள் 41 பேரும், பல்வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, மன்னார் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களில், முதலில் 35 மீனவர்களை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தால் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, விளக்கமறியலில் உள்ள 6 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த 41 இந்திய மீனவர்களும் விடுதலை செய்ய விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் நேற்று திங்கட்கிழமை, கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினால் மன்னார் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, குறித்த அறிவுறுத்தலுக்கு அமைவாக, 41 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். இவர்களில் 4 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் தற்போது, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு, கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா கூறினார்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மேலதிகமாக நேற்று காலையில் கரையொதுங்கிய நால்வரும், விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X