2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

இருமல் மருந்து விவகாரம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

Editorial   / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டதில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில், அலட்சியத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆளான டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டு உள்ளார். இதேபோன்று, தமிழகத்தில் செயல்பட கூடிய, கோல்ட்ரிப் எனப்படும் இருமல் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மருந்து நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் குழந்தைகளின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை சிந்த்வாராவின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திரேந்திரா சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது உறுதி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டது என்றும் கூறினார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.

விஷால் என்ற 5 வயது குழந்தை சனிக்கிழமை (11) மாலை உயிரிழந்தது. இதன்பின்னர், இரவில் மயங்க் சூரியவன்ஷி என்ற 4 வயது குழந்தையும் உயிரிழந்தது. இந்த 2 குழந்தைகளும் சிந்த்வாரா மாவட்டத்தின் பராசியா நகரை சேர்ந்தவர்கள் ஆவர். கலப்பட இருமல் மருந்து குடித்ததில் அந்த குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். அதில் கலந்திருந்த நச்சு, உடலின் உள்ளுறுப்புகளை பாதித்து உள்ளது.

சில குழந்தைகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில், தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட ஸ்ரேசன் மருந்து நிறுவன உரிமையாளரான ரங்கநாதன் கோவிந்தன் சென்னையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (12)  கைது செய்யப்பட்டார்.

சிறப்பு விசாரணை குழு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. மருந்து நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என பராசிய துணை மண்டல பொலிஸ் அதிகாரி ஜிதேந்திரா சிங் ஜாட் கூறியுள்ளார். அவரை சென்னையில் இருந்து நாளை பராசியா நகருக்கு அதிகாரிகள் கொண்டு செல்வார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X