2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் கடல் பசு (வீடியோ)

Mayu   / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்துள்ள ஐயன்தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியில், சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று இன்று (18) இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் பசு, கடல் குதிரை, பவளப்பாறைகள் உள்ளிட்ட 1400-க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அண்மைக்காலமாக மீனவர்களின் வலைகளில் சிக்கும் இத்தகைய உயிரினங்களை அவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலிலேயே விட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐயன்தோப்பு கடற்கரையில் இன்று காலை மாபெரும் கடல் பசு ஒன்று இறந்து கிடப்பதைக் கண்ட மீனவர்கள், மண்டபம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் பின்வரும் தகவல்கள் தெரியவந்துள்ளன:

இனம்: ஆண் கடல் பசு

வயது: சுமார் 10 ஆண்டுகள்

எடை: சுமார் 800 கிலோ கிராம்

அளவு: அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ

"இந்தக் கடல் பசு படகின் அடிப்பகுதியில் உள்ள இரும்பு விசிறியில் (Propeller) அடிபட்டு உயிரிழந்ததா அல்லது வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவினால் உயிரிழந்ததா என்பது குறித்து கால்நடை மருத்துவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையாகத் தெரியவரும்" என மண்டபம் வனச்சரகர் தெரிவித்தார்.

மருத்துவர்களின் உடற்கூறாய்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்தனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .