2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஐவரைக் கைதுசெய்துள்ளதாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மலேஷியாவிலுள்ள இலங்கை தூதுவர் மற்றும் இரண்டாம் நிலை செயலாளர் மீது கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்தே ஞாயிற்றுக்கிழமை (04) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு விஜயம் செய்திருந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை அரசாங்கத்தின் சார்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளதாக இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

காயமடைந்த இருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மலேஷியாவுக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை வழியனுப்புவதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்துக்குச் சென்றிருந்த போதே இவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

'மஹிந்த ராஜபக்ஷ எங்கே?' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை தூதுவரிடம் வினவியதாகவும், தூதுவர் அளித்த பதிலால் எரிச்சல் அடைந்தே, அவ்விருவரின் மீதும் தாக்குதல் நடத்தியதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மலேசியாவுக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக திங்கட்கிழமை (07) காலை 10.30க்கு நாடு திரும்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X