2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

எண்ணெய்ச் சேமிப்பிடத்தை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இயக்கும்

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகத்தில் அமைந்துள்ள, முதலாவது உலகப் போர் காலத்துக்கு எண்ணெய்ச் சேமிப்பிடத்தை, இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இயக்குவதற்கு, இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இணைந்த இந்த நடவடிக்கையின் விவரங்கள் குறித்து, பேரம்பேசல்கள் இடம்பெற்று வருவதாக, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், திருகோணமலையிலுள்ள கீழ் எண்ணெய்த் தாங்கிப் பண்ணையிலுள்ள 99 சேமிப்புத் தாங்கிகளில் 15ஐ, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், நடத்தி வருகிறது. புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள இணைந்த திட்டம், மேற்பகுதியிலுள்ள எஞ்சிய 84 தாங்கிகள் தொடர்பிலேயே ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் 10 தாங்கிகள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் பாவனைக்காக ஒதுக்கப்படவுள்ளது.

உலகப் போர்க் காலத்தில், பிரித்தானியர்களால் கட்டப்பட்ட இந்தச் சேமிப்பிடங்களில் அநேகமானவை, சிறந்த நிலையில் காணப்படுவதாக, அமைச்சர் சந்திம வீரக்கொடி, மேலும் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, திருகோணமலையில் மேற்பகுதித் தாங்கிகளை விருத்தி செய்வதற்கான வேலைத் திட்டம், திருகோணமலை, பிராந்திய பெற்றோலிய நுழைவாயிலாக மாறுவதற்கு இடமளிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளுக்குமிடையில், இந்தத் தாங்கிகளை நிர்வகிப்பது தொடர்பாக, 2003ஆம் ஆண்டில், ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அதன்போது, 12,250 கிலோலீற்றர்களைக் கொண்ட 99 தாங்கிகளை, இந்தியா தரமுயர்த்தி, ஆளுகை செய்வதென முடிவுசெய்யப்பட்டது. இது, 35 ஆண்டுகாலக் குத்தகைக் காலமாகவும் முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம், அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையிலேயே, 2015இல் பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தைத் தொடர்ந்து, இது தொடர்பான கலந்துரையாடல்களை, இரு நாடுகளும் மீள ஆரம்பித்ததோடு, இவ்வாண்டு மேயில், இலங்கைக்கு மோடி வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக, இந்தப் பேச்சுவார்த்தைகளை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X