2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘என்னை ஓரங்கட்ட முயற்சி’

Editorial   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையில் எந்தவோர் இடத்திலும், என்னை குற்றவாளி எனக் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரவி கருநாணாயக்க, என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்டும் முயற்சியாகவே, இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவும், என்னை ஓரம் கட்ட சிலர் முயன்றுவருதாகவும் குறிப்பிட்டார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,  

“என் மீதும் எனது கட்சி மீதும் சேறும் பூசும் நடவடிக்கை முன்னெடுக்கும் அதேவேளை, எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தவும் என்னை அரசியலிலிருந்து ஓரம் கட்டுவதற்காகவுமே, பிணைமுறி விவகாரத்தில் என்னை சிக்க வைத்துள்ளனர்.  

“ஜனாதிபதி ஆணைக்குழுவில் எங்கோ ஒரு மூலையில் இருந்த எனது பெயரை இதற்குள் உள்வாங்கி என்னை சிக்கவைத்துள்ளனர். பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையில் எந்தவோர் இடத்திலும், என்னைக் குற்றவாளி எனக் குறிப்பிடவில்லை. எனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டேன். அதற்கமைய, என்னுடைய அழுத்தத்தின் கீழ் மத்திய வங்கியோ அல்லது வேறு எந்தவொரு வங்கியோ இல்லை என ஆணைக்குழு ஏற்றுக்கொண்டது.   

“நான் எதுவும் செய்யவில்லை. இதை செய்தவர் யார்? செய்வித்தவர் யார்? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பிட்டிப்பன ஆணைக்குழு அறிக்கையிலும் என்னை, குற்றவாளியென எவ்விடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையின் கோணத்தில் மாற்றம் ஏற்பட்டதன் விளைவாகவே, எனது பெயர் இதில் குற்றவாளியாக உள்வாங்கப்பட்டது. என் மீது ஏன் இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது.   

“எனக்கு எதிராக சாட்சியமளித்தவர்களுக்கு இந்த அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியது. ஆனால், இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்துக்காக பாடுபட்ட எனக்கு, எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவும் இல்லை எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பையும் திருப்பி எடுத்துவிட்டனர்.  

“அமைச்சர் ஒருவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டால் அவர் அரசியல் கட்சித் தலைவரின் பின்னோ அல்லது ஜனாதிபதியின் பின்னாலோ அவர் ஒழிந்து விடுகின்றார். இந்த கலாசாரம் கடந்த ஆட்சி காலத்தில் இருந்தது. அதேபோன்று இந்த நல்லாட்சியிலும் காணப்படுகின்றது.  

“ஆட்சி மாற்றத்துக்காக நாம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இன்றும் சில திருடர்கள் சுதந்திரமாக உலாவுகின்றனர். இது நல்லாட்சிக்கு ஆரோக்கியமல்ல.   

“ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எவரும் தவறு இழைக்கவில்லை. ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற ஒரு காரணத்துக்காக அக்கட்சியில் இருந்தவர்கள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. ஆனால், நாம் எதற்கும் அஞ்சுவதில்லை. உண்மை என்றோ ஒரு நாள் வெளிவரும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X