2025 ஜூலை 05, சனிக்கிழமை

’ஐ.தே.கவோடு சந்திரிகா இணையமாட்டார்’

Editorial   / 2019 ஜனவரி 16 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு, ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்கத்தை மீண்டும் அமைக்க, அக்கட்சியில் இணையமாட்டாரெனத் தான் நம்புவதாக, சு.க​வின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர ​தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சந்திரிகா அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில், தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து செயற்படுவதற்கு எதிர்ப்பை வெளியிடும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, மீண்டும் ஐ.தே.கவுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து செயற்படுவதையே விரும்புகிறார் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் எனக் கூறமுடியாதென்று கூறிய தயாசிறி, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோற்றிருந்தாலும், கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, பாரிய வெற்றியைப் பெற்றிருந்தது என்றும் எனவே, அரசியலில் தோல்வி வெற்றி என்பது சாதாரணமானது எனவும் தெரிவித்தார்.

ஒருபோதும், மீண்டும் ஐ.தே.கவுடன் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கமொன்றை அமைக்காது எனவும் ஐ.தே.கவுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ​அடிப்படையிலேயே, ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைத்திருந்ததாகவும், இதனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பாரிய பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

ஆகவே, தொடர்ந்து ஐ.தே.கவுடன் இணைந்திருந்தால், கட்சியை விட்டு அதிகமானோர் வெளியேறி, இறுதியாக கட்சியின் பெயர்ப் பலகை மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலை ஏற்படுமெனச் சுட்டிக்காட்டிய தயாசிறி எம்.பி, எனவே, கட்சியைக் கட்டியெழுப்பக்கூடிய தீர்மானங்களை எடுப்பதே பொறுத்தமாக இருக்குமென வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .