2025 மே 21, புதன்கிழமை

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற கோரினோம்: சம்பந்தன்

Kanagaraj   / 2015 நவம்பர் 24 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

'ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரான சமந்தா பவரிடம் நாங்கள் வலியுறுத்தினோம்' என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கூட்டமைப்புப் பிரதிநிதிகள், அமெரிக்கத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரை, நேற்று திங்கட்கிழமை சந்தித்தனர்.

இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்புத் தொடர்பில் இரா.சம்பந்தன் கூறுகையில்,

'விசேடமாக, காணி, கைதிகள், இராணுவ மயமாக்கல், மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வீட்டு வசதி, தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அவருக்கு நாங்கள் விளக்கியுள்ளோம்.

மேலும், அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் பேசியுள்ளோம். எமது மக்களுக்கு, இந்நாட்டில் கௌரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழக்கூடிய வகையில், தமிழ் பேசும் பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு, ஒரு நியாயமான அரசியல் தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்துள்ளதால் தமிழ் மக்கள், தமது கௌரவத்தை இழந்துள்ளனர். அதனால், இராணுவப் பிரசன்னத்தையும் குறைக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளோம்' என்றார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாகப் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழருக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நிறைவேற்ற, மனித உரிமைகள் பேரவை மற்றும் அமெரிக்கா ஆகியன, தமது கடமைகளை முறையாகப் பேண வேண்டும் என இன்றைய சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள சமந்தா பவர், வடக்குக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். நேற்று முன்தினம் அங்கு விஜயம் மேற்கொண்ட அவர், அதன்போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனையும், வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ் பளிஹகக்கார ஆகியோரையும் சந்தித்து, வடக்கின் நிலைமை தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது அவர், வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படுவது தொடர்பாக ஆளுநருடனும், வடக்கின் அபிவிருத்திக்கு உதவுகின்றமை தொடர்பாக முதலமைச்சருடனும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X