2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒட்டுக்கேட்டமைக்கு எதிராக விசாரணை

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜம்   

“மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடமிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலைபேசி அழைப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டமை அல்லது ஒட்டுக்கேட்டமை தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை குழு விசாரணை செய்யும்” என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி விரைவில் இறுதித்தீர்மானத்தை அறிவிப்பதாகவும், சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.  நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக்காலை 9.30க்குக் கூடியது. சபாநாயகரின் அறிவிப்புகளுக்கான நேரத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இதன்போது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, “நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலைபேசி விவரங்கள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு அமையவே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அவர்களுடைய அலைபேசி ஒலிப்பதிவுகளை எந்தவிதத்திலும் கேட்கவில்லை என ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வர், இந்த விடயத்தைத் திசை திருப்பும் வகையில் கருத்து வெளியிடுகின்றார்”என்றார்.   

இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரயெல்ல, “நாம் விசாரணைக்கு எதிரானவர்கள் அல்லர். நாம் அதற்கு இடையூறு செய்யவில்லை. ஆனால், இரகசியமான முறையில் பேணப்பட வேண்டிய தகவல்கள் எவ்வாறு வெளியாகின? அந்தத் தகவல்கள் எவ்வாறு ஊடகங்களுக்குக் கசிந்தன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றுதான் நான் கூறியிருந்தேன்” என்றார்.  “இந்த விடயம் குறித்து சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை நடத்துவதற்கு, நாம் அனுமதி கோரியிருந்த போதும், சபாநாயகர் அதற்கு அனுமதியளிக்கவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, இதன்போது குறிப்பிட்டார்.   “சபை முதல்வர் நேற்று ஒரு கருத்தையும் இன்று ஒரு கருத்தையும் முன்வைக்கிறார். அவர், நாடாளுமன்றத்தைத் திசை திருப்ப முயற்சிக்கின்றார்” என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் த சொய்சா, இதன்போது குற்றம் சுமத்தினார்.  

இதனையடுத்து, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, “மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் என்ற வகையில், எமது நடவடிக்கைகள் குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டும். இன்று பிணைமுறி விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை நாடே அறியும். ஆதலால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலைபேசி அழைப்புகள் தொடர்பான விவரங்கள் வெளியானதில் தவறில்லை” என்றார்.  

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் கபீர் ஹாசிம், “ஆணைக்குழுவுக்கு, உங்களது தரப்பினரை சாட்சியமாக அழைக்கும் போது, எவ்வாறு அவர்கள் ஒளிந்துகொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். நாடாளுமன்ற அமர்வுகள் உள்ளன எனக் கூறி தவிர்த்தவர்கள் இப்போது பேசுகின்றார்கள்” என்றார்.  

எனினும், “இது தொடர்பாக ஆராயப்படும்” என உறுதியளித்த சபாநாயகர், இதனை விவாதப்பொருளாகக் கொள்ளாமல் சபை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .