2024 மே 07, செவ்வாய்க்கிழமை

‘ஒற்றையாட்சிக்குப் பாதுகாப்பு’

Nirshan Ramanujam   / 2017 நவம்பர் 02 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டில் ஒற்றையாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நான் மட்டுமல்லாது, ஜனாதிபதி சிறிசேனவும் ஏற்றுக்கொள்கின்றார். அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகளுடன், நாமும் உடன்படுகின்றோம்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், மூன்றாவது நாளாக நேற்றும் (01) இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டியுள்ளது. மக்களின் ஆணைப்படியே நாம் செயற்படுகிறோம். அவர்களின் ஆணையை மீறி நாம் ஒருபோதும் செயற்பட முடியாது” என்றும் வலியுறுத்தினார். 

“அரசமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை, அரசாங்கத்தின் சட்டமல்ல. நாம் 73 தடவைகள் கூடி கலந்துரையாடி முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மாத்திரமே. இதில் அனைத்துக் கட்சிகளினதும் யோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் நாம் அனைவரும் கலந்துரையாடி, அனைவரது ஒத்துழைப்போடும்தான் முன்கொண்டு செல்ல முடியும்”என்றும் குறிப்பிட்டார். 

“அரசமைப்புச் சபையை, நாளைய தினமும் (வியாழன்) கொண்டு செல்லத் தீர்மானிக்கப்பட்டமையை நான் வரவேற்கின்றேன். இங்கே அனைவரினதும் கருத்துகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம். 

“நானும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மகாசங்கத்தினரை தனித்தனியாகச் சந்திக்கவுள்ளோம். அனைத்து மதத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். அரசியல் கட்சிகளாக, நாம் ஒன்றாக அமர்ந்து இது குறித்துப் பேசுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

“இந்த அரசமைப்பை உடனடியாகக் கொண்டு வர முடியாது. இது விரிவான கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். சில வேளைகளில் அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மாதமாகலாம். தேர்தலும் நெருங்குவதால் எதிர்வரும் ஏப்ரல் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்பாவது, அனைவரதும் ஒத்துழைப்போடு, அரசமைப்புச் சபையின் அங்கிகாரத்தைப் பெற முயற்சிப்போம்” என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.  

அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவுக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள அரசமைப்புக் கோட்பாடுகளை இங்கே பார்ப்போம். 

“அதில், முதலாவதாக ஒற்றை ஆட்சியின் கீழ் இறைமை மக்கள் வசம் இருக்க வேண்டுமென்பதுடன், அது பாராதீனப்படுத்த இயலாதிருத்தல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் இணங்குகிறோம். யார் இணங்கவில்லை என்றார்கள்? 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியும் இணங்குகிறார்கள். உங்களுடைய கட்சிக்குள்ளேயே தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள் போல.  

“1978 ஆம் அரசமைப்பில் பௌத்த மதம் சம்பந்தமான உறுப்புரை எவ்வித மாற்றத்துக்கும் உள்ளாகக் கூடாது என யோசனை முன்வைத்துள்ளீர்கள். நாம் இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை” என்றார். 

தற்போதுள்ள ஜனாதிபதி முறை மாற்றப்பட வேண்டும் என அடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது தொடர்பில் கலந்துரையாட நாம் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“அரசமைப்பைக் கொண்டுவருவதானது, நீண்ட கால செயற்பாடு. அதற்கென நியதிகள் உண்டு. இங்கே அரசமைப்புச் சபை கூடி அரசமைப்பின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதித்து வருகின்றோம். இங்கே அனைவரினதும் யோசனைகள் உள்வாங்கப்பட்டு, அனைத்துத் தரப்பினரதும் கருத்துகள் உள்வாங்கப்பட்டு, மீண்டும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசமைப்புச் சபையில் சமர்ப்பிக்கப்படும். அதன்போது அரசமைப்புச் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றால், அமைச்சரவை அங்கிகாரத்துக்கு வரைபாக சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தினூடாகச் சட்டமாக்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X