2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கூட்டொப்பந்தம் கைச்சாத்து

George   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

அடிப்படைச் சம்பளம்: ரூ. 500

உற்பத்தித்திறன் கொடுப்பனவு:  ரூ. 140

நிலையான விலைக் கொடுப்பனவு:  ரூ.30

வருகைக் கொடுப்பனவு: ரூ.60

மொத்தம்:  ரூ.730

மேலதிகமாகப் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோகிராம் கொழுந்துக்கும் 25 ரூபாய் வழங்கப்படும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு, 730 ரூபாய் சம்பளத்துடன் 300 நாட்கள் வேலையை வலியுறுத்தும் கூட்டு ஒப்பந்தம், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழ​மை பிற்பகல் 3.30 மணியளவில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையிலுள்ள 21 பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பிலான முதலாளிமார் சம்மேளனத்துக்கும், இலங்கை தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இணைந்த தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கம் ஆகியன அடங்கிய தொழிற்சங்கங்களுக்கும் இடையிலேயே, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  

2013ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட 2013ஆம் ஆண்டின் கூட்டொப்பந்தம் இல. 10ஐ மாற்றீடு செய்வதற்காக, இது கைச்சாத்திடப்பட்டதோடு, இது, இம்மாதம் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கும். எந்தவொரு தரப்போ, இதிலிருந்து விலக வேண்டுமாயின், ஒரு மாதகாலத்துக்கு முன்னர் அறிவிக்க வேண்டும். 

ஊதிய விவரம்

தினசரிக் கூலியாக, 500 ரூபாய் வழங்கப்படும். இந்த ஊதியத்துக்கே, ஊழியர் சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கை நிதிய வரப்பிரசாதங்கள் வழங்கப்படும். 

தினசரிக் கூலி தவிர, தினசரி வருகைக் கூலியாக, 60 ரூபாய் வழங்கப்படும். மாதாந்தம் வழங்கப்படும் வேலை நாட்களில் 75 சதவீதமானவற்றுக்கு வருகை தருவோருக்கு இது வழங்கப்படும். இதைக் கணக்கெடுக்கும் போது, ஞாயிற்றுக்கிழமைகள், போயா தினங்கள், ஏனைய சட்டமுறைப்படியான விடுமுறை தினங்கள் ஆகியன கணக்கிலெடுக்கப்படாது. இதற்கு முன்னைய 3 மாதங்களிலும் 75 சதவீதமான வருகையைப் பதிந்து, நடப்பு மாதத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக, இந்த 75 சதவீதத்தை ஒருவர் அடையவில்லையெனில், வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நாட்கள், வேலை செய்த நாட்களாகக் கருத்திலெடுக்கப்பட்டுக் கணிக்கப்படும். 

நிலையான விற்பனைப் பகிர்வுக் கொடுப்பனவாக தினசரி 30 ரூபாய் வழங்கப்படுவதோடு, வழங்கப்பட்ட பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட நாட்களில் உற்பத்தித்திறன் கொடுப்பனவாக, தினசரி 140 ரூபாயும் வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாகப் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோகிராம் தேயிலைக்கும், 25 ரூபாய் வழங்கப்படும்.  

இவற்றுக்கு மேலதிகமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் புரியப்பட்ட பணிக்காக, அடிப்படைச் சம்பளமான 500 ரூபாயின் ஒன்றரை மடங்கு (750 ரூபாய்) வழங்கப்படுவதோடு, நிலையான விற்பனைப் பகிர்வுக் கொடுப்பனவாக 30 ரூபாய் வழங்கப்படும். 

இறப்பர் தொழிலாளர்களுக்கு, மேற்குறிப்பிடப்பட்டவற்றில், மேலதிக கிலோகிராமுக்கான கொடுப்பனவு தவிர ஏனையவை, ஒரே மாதிரியாகவே காணப்படும். மேலதிகமான ஒரு கிலோகிராம் இறப்பருக்கான கொடுப்பனவு, 35 ரூபாயாக வழங்கப்படும். 

மேற்படி கொடுப்பனவுகளைத் தவிர, வேறு எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படாது என, இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏனைய விவரங்கள்:

தொழிற்றுறையின் உற்பத்தித்திறனை முன்னேற்றுமுகமாக, உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தமொன்றுக்கு, அடுத்த தடவை செல்வதற்கு, தொழிற்சங்கங்கள் உடன்படுகின்றன. 

பாகுபாடின்றி வேலைக்கான சமமான கொடுப்பனவு என்பதற்கமைய, தேயிலை பறிப்பதில் பெண்களுக்கும் ஏனைய பணிகளில் ஆண்டுகளுக்கும், தற்போதைய வழக்கமான நடைமுறைகள் கணக்கிலெடுக்கப்படும். 

பணிபுரியும் இடங்களைச் சுத்தமாகப் பேணுவதற்கு, பிராந்தியப் பெருந்தோட்ட நிறுவனங்களுக்குக் கடமையுண்டு.   

(படங்கள்: மு. இராமச்சந்திரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .