2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

காணாமற் போனோர் தொடர்பில் தேசிய பொறிமுறை அவசியம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமற்போன எமது உறவுகள் தொடர்பில் அவசரமாக சான்றிதழ்கள் வழங்குவதென்பது எமது மக்களுக்கான நியாயமாக அமையாது. எனவே, காணமற்போனவர்கள் தொடர்பில் நியாயமான ஆய்வினை மேற்கொள்ளக்கூடிய வகையிலான தேசிய பொறிமுறையே அவசியமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

'காணாமற்போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு, காணாமற்போனவர்களின் உறவுகளின் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து பெறப்பட்டும் வருகின்றன. இந்த ஆணைக்குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டினை நாம் ஏற்கெனவே முன்வைத்துள்ளோம். இங்கு முன்வைக்கப்பட்டுள்ளதும், முன்வைக்கப்படுகின்றதுமான சாட்சியங்கள் தொடர்பில் பக்க சார்பற்ற வகையிலான முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை நான் கடந்த 13ஆம் திகதி நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளேன். 

இங்கு சாட்சியங்களை வழங்கியுள்ள ஒரு சாரார், அறியாமைகள் காரணமாகவும் தூண்டப்பட்ட நிலைகளிலும், சுய தேவைகள் நிமித்தமும் சாட்சியங்களை வழங்கியுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த சந்தேகம் எமக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டு. 

இந்த சாட்சியங்கள் முறையாக ஆராயப்பட்டதன் பின்னர், உண்மைகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறு உண்மை என உறுதிப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு நியாயமான பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கமைவாக தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்' என அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .