2025 மே 21, புதன்கிழமை

கைதிகள் விவகாரத்தில் வழங்கிய உத்தரவாதத்தை அமுல் படுத்தவும்: சுமந்திரன்

Kanagaraj   / 2015 நவம்பர் 24 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதத்தை அரசாங்கம் நிபந்தனையின்றி உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசியல் கைதிகள், கடந்த 17ஆம் திகதி தமது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக இடைநிறுத்திய போது, எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னதாக முதலாவது குழு, புனர்வாழ்வுக்காக அனுப்பப்படும் என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் அளித்திருந்தது.

இந்த முதலாவது குழுவில் இடம்பெறுகின்ற இருபது பேர் கொண்ட பெயர்ப்பட்டியல், நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமரின் அலுவலகத்தினால் என்னிடத்தில் கடந்த 20ஆம் திகதி கொடுக்கப்பட்டு, கைதிகளின் சட்டத்தரணிகளுக்கு  அந்த தகவலை கொடுக்குமாறும் வேண்டிக் கொள்ளப்பட்டேன். அதனடிப்படியில் கைதிகளின் சட்டத்தரணிகளுக்கு அந்த தகவலை பரிமாறியிருந்தேன்.

அந்தப்பட்டியலோடு கொடுக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகள் ஏற்புடையதல்ல என்பதை  எதிர்க்கட்சியின் சார்பில் வரவு - செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்ததை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது நான் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தேன்.

 அதனைத் தொடர்ந்து பிரதமர் என்னோடு இது குறித்து பேசிய போது, இந்த நிபந்தனைகள் ஏற்;புடையதல்ல என்பதை எடுத்துரைத்தேன். அதனை தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கும் இந்த விடயம் தொடர்பில் எனது நிலைப்பாட்டை கூறியிருந்தேன்.

இந்த பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலர் ஏற்கெனவே, விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். இன்னும் சிலர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட வழக்குகள் உள்ளவர்கள். ஆகவே, அப்படியானவர்கள் மீதுள்ள ஒவ்வொரு வழக்கிலும் இந்த நடைமுறை செயற்படுத்தப்படாதவிடத்து அவர்கள் புனர்வாழ்வுக்காக வெளியிலே வருவது சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.

இந்தப் பட்டியலில் மூவருக்கு எதிராக மாத்திரமே ஒரு வழக்கு இருகின்றது. அதனடிப்படையில் எண்பத்தைந்து பேரில் ஆரம்ப கட்டமாக மூவர் மாத்திரம் புனர் வாழ்வுக்காக விடுவிக்கப்படுவதனையும், இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X