2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கோப் குறித்து அவையில் வாதம்; ‘ஆவா’, ‘கியா’ எனக் கிண்டல்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை தொடர்பில், நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25), வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.   

நாடாளுமன்றம் பிரதிச் சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில், நேற்றுப் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, கோப் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் இன்று (நேற்று) சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தில் நாமும் வெளியில் மக்களும், எதிர்பார்த்து நிற்கின்றனர்.

எனினும், கோப் குழுவின் நேற்றைய (திங்கட்கிழமை) கூட்டத்திலிருந்து, அதன் தலைவர் எழுந்து சென்று விட்டதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.   

இதன்போது எழுந்த கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி எம்.பி, “கோப் குழுவின் அறிக்கையானது, 25ஆம் திகதியன்றோ அல்லது இவ்வாரத்துக்குள்ளோ சமர்ப்பிக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அறிக்கையை மொழிபெயர்ப்பதில் மற்றும் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதனால், இன்று சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று கூறியதுடன், எவ்வாறாயினும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.   

குறுக்கிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எம்.ஏ. சுமந்திரன், “கோப் அறிக்கை மொழிபெயர்க்கப்படவில்லை என்று தலைவர் கூறுகின்றார். எனினும், அவ்வறிக்கையை தமிழ்மொழியில் கொடுக்காவிடின், தமிழ்மொழி பேசுகின்ற உறுப்பினர்களுக்கு பெரும் அசாதாரணம் இழைக்கப்பட்டு விட்டதாகவே அமையும் என்பதனால், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.  

இதனிடையே எழுந்த விமல் வீரசன்ச எம்.பி, “கோப் குழுவின் அறிக்கையில் பெரும்பான்மையானோர் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அதனை மாற்றுவதற்கு ஐ.தே.க உறுப்பினர்கள் முயன்றதாகவும் அதனால் கோப் தலைவர், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டதாகவும் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.   

இந்நிலையில், ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு கேட்கப்படுகின்றது. ஆக, இவர்கள் எல்லோரும் இணைந்து அறிக்கையைச் சமர்ப்பிக்காமல் இருப்பதற்காக, கூட்டு நாடகம் ஆடுவது இவர்களின் செயற்பாடுகளிலிருந்து புலனாகிறது.   

அறிக்கையை இவ்வாரத்துக்குள் சமர்ப்பித்தால் மட்டுமே விவாதிக்க முடியும். வரவு - செலவுத்திட்டம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில், கோப் அறிக்கை குறித்து கூட்டு நாடகம் ஆடுகின்றனர்” என்றார்.   

சிரித்துக்கொண்டே ஆசனத்திலிருந்து எழுந்த பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா, “பெரும்பான்மை எண்ணிக்கை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து விமலுக்கு வியங்கவில்லை. கோப் குழுவில் 26 உறுப்பினர்கள் இருக்கின்றனர். எனினும், அவ்வறிக்கையில் 8 உறுப்பினர்கள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளனர். 26 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள், எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களாவர்?  விமலுக்கு, கணக்கு தெரியவில்லை. அப்படியாயின் அவர் முதலில் பாடசாலைக்குச் செல்ல வேண்டும்” என்று கூறினார். இதன்போது, அவையிலிருந்தவர்களில் பலரும் சிரித்துவிட்டனர்.  

இதனிடையே எழுந்த அநுர குமார திஸாநாயக்க எம்.பி, கோப் குழுவின் அறிக்கை மாற்றப்படுவதாகவும் தற்காலிகத் தலைவரை கொண்டு அறிக்கை தயாரிக்கப்டுவதாகவும் அறியமுடிகின்றது. அர்ஜுன மகேந்திரனை தலைவராக கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும் பரவாயில்லை, கோப் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும் என கூறியமர்ந்தார்.  

கோப் அறிக்கை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கெண்டிருந்தபோது,  எம்.பியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ, தனது ஆசனத்தில் இருந்தார்.  

அவரைப் பார்த்துக்கொண்டு எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி,மஹிந்த ராஜபக்‌ஷவிடம் பெயரை பெற்றுக்கொள்ளவே இவர்கள் நாடகம் ஆடுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.  

வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “கோப் அறிக்கை 1 அல்லது 2 அல்லது 5 வரலாம். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியாக இருந்தால், 10 வருடங்களானாலும் அறிக்கை வராது. நாம் 2 வருடங்களில் அறிக்கையை சமர்ப்பிக்க முயன்றோம். கோப் குழுவின் தலைவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. உங்களுக்கு நம்பிக்கையில்லையா?” என்று, எதிரணியைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது” என்று, எதிரணியினர் ஏகோபித்த குரல் கொடுத்தனர்.  

“யாழ்ப்பாணத்தில் “ஆவா” குழு இருக்கிறது. “ஆவா” “கியா” (ஆவா- வந்தது, கியா-போனது) நானல்ல, மஹிந்த ராஜபக்‌ஷ இருந்தாலும் “ஆவா” “கியா” நடக்கும். எனினும், இட்டு தீமூட்டுவதற்கு முயன்றனர். இனவாதம் பேசுகின்றனர்” என்று கூறினர்.  

இதன்போது, சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பொதுஎதிரணி உறுப்பினர்கள் பிரதமர் ரணிலைப் பார்த்து “கள்வன், கள்வன்” என்று கோஷமிட்டனர். “யார் கள்வன் என்பதை தெரியவேண்டுமாயின், கண்ணாடியைக் கொண்டுவந்து முன்னால் வைத்துப் பாருங்கள்” என்றார்.  

“நாடாளுமன்றத்தைப் பலப்படுத்த வேண்டுமாயின், ‘குழு நிலை’ கூட வேண்டும். அங்கு முரண்பாடுகள் ஏற்படும். இங்கு மட்டுமல்ல, உலகில் பல நாடுகளிலும் இவ்வாறான நிலைமை இருக்கின்றது” என்று சுட்டிக்காட்டி அமர்ந்தார். அதன்பின்னரே நாடாளுமன்றம் அடுத்த கூட்டத்துக்கு நகர்த்தப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .